தேசம் காக்க, கல்வியை காக்க திருப்பூரில் சங்கமிக்கும் மாணவர்கள்
“மாணவர் ஒற்றுமை ஓங்குக!”, “ஜனநாயகக் கல்வி முறையைக் கொண்டு வருவோம்!” போன்ற எழுச்சிமிக்க முழக்கங்களிடையே இந்திய மாணவர் சங்கத்தின் கொடி 1970 டிசம்பர் 30ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உயர்ந்தது. ஒன்றரை லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக முதல் மாநாட்டில் மலர்ந்தது. தமிழகத்தின் வேர்கள் தமிழக மாணவர் சங்கத்தின் முதல் மாநாடு 1968 ஆகஸ்ட் 11ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. உயர்கல்வி படிக்க விரும்பும் அனைவருக்கும் கல்லூரிகளில் இடம், கல்லூரிகளில் தமிழை பாடமொழியாக்குதல், தமிழை ஆட்சிமொழியாக்குதல் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 1968 முதல் அமைப்புரீதியாகச் செயல்பட்ட தமிழக மாணவர் சங்கம், 13 மாநிலங்களில் செயல்பட்ட புரட்சிகர மாணவர் அமைப்புகளை ஒருங்கிணைத்து 1970இல் இந்திய மாணவர் சங்கமாக (எஸ்எஃப்ஐ) உருவானது. இன்று 23 மாநிலங்களில் நாற்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு தேசத்தின் தனிப்பெரும் மாணவர் அமைப்பாகத் திகழ்கிறது. கல்வி மீது பாஜக அரசின் தாக்குதல் 2014 முதல் பாஜக அரசின் நவதாராள வாத கொள்கை யால் இளைஞர் களின் கல்வி உரிமை மறுக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்வியில் சேருவோர் வெறும் 28% மட்டுமே. இதில் 67% மாணவர்கள் தனியார் நிறுவனங்களை நம்பியுள்ளனர். தேசியக் கல்விக் கொள்கை 2020 பன்னாட்டு முதலாளிகளின் மூலதனத்தை கல்வித் துறையில் நேரடியாக அனுமதிக்கிறது. இதன் பின் 40% கல்விக் கட்டணம் உயர்ந்துள்ளது. நீட், கியூட் போன்ற தேர்வுகள் வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளன. காவிமயமாக்கல் மற்றும் வரலாற்றுத் திரிப்பு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆர்எஸ்எஸ் பரிவாரத்தைச் சார்ந்தவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்திய வரலாறு மனுவாத அடிப்படையில் திரிக்கப்படுகிறது. சனாதனக் கோட்பாடுகள் வரலாறாக மாற்றப்படுகின்றன. பாடப்புத்தகங்களில் சாவர்க்கரை விடுதலைப் போராட்ட வீரராக சித்தரித்தல், வர்ணாசிரம கோட்பாட்டை பாடமாக்குதல், மொழிப் பன்முகத்தன்மையை அழித்து இந்தியை அடிப்படை மொழியாக திணித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தீரமிக்க போராட்டமும் தியாகமும் பொதுக் கல்வி, அறிவியல்பூர்வ முற்போக்கான ஜனநாயகக் கல்வியை உருவாக்க எஸ்எப்ஐ 55 ஆண்டுகளாக போராடி வருகிறது. சாதியக் கொடுமைகள் / இந்துத்துவா பயங்கரவாதிகள் மற்றும் வலதுசாரி கும்பல்களை எதிர்த்து வீரச்சமர்புரிந்த போராட்டங்களில் சோமு, செம்பு, வி.கே.புரம் குமார், அபிமன்யு, தீரஜ், அனீஸ்கான் போன்ற இளம் மாணவர்களை இழந்துள்ளோம். திருப்பூர் மாநாடு இத்தகைய மகத்தான பாரம்பரியப் கொண்ட - தமிழகக் கல்வி வளர்ச்சியில் மகத்தான போராட்டங்களையும் முன்னெடுத்த - இந்திய மாணவர் சங்கத்தின் 27வது மாநாடு திருப்பூர் மாநகரில் ஆகஸ்ட் 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தொழிலாளர்களின் உழைப்பாலும் தொழிற்சங்கப் போராட்டத்தாலும் வளர்ந்த திருப்பூரில் முதல் முறையாக மாநில மாநாடு நடைபெறுகிறது. ஆஷர்மில் தியாகி பழனிச்சாமி, சீராணம்பாளையம் பழனிச்சாமி, பன்னீர் செல்வம், இடுவாய் இரத்தினசாமி போன்ற தியாகிகளைப் பொதுவுடைமை இயக்கத்திற்கு அளித்த தியாகபூமியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சங்கமிப்போம். மாநில உரிமையையும், தேசத்தின் பன்முகத்தன்மையையும் பாதுகாப்போம்.