பேருந்து வசதி கேட்டு மறியல் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு
பொள்ளாச்சி, செப்.22- கோமங்கலம்புதூரில் பேருந்துகள் நின்று செல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம்புதூர் கிராமத்தில் பேருந்து நின்று செல்வதில்லை என குற்றம்சாட்டி, கடந்த 17 ஆம் தேதியன்று பொள்ளாச்சி-பழனி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், திங்களன்று இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு எட்டும் வகையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யபட்டு பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், வட்டார போக்குவரத்து அலுவலர் செழியன், போக்குவரத்து ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், தனியார் பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் ராஜா மற்றும் கோமங்கலம்புதூர் பொதுமக்கள் சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் வி.பாலகுருசாமி, ஊர் பிரமுகர்கள் பாபு, நித்தியானந்தம், சந்திரமோகன், பாலகுருசாமி, நாச்சிமுத்து மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் பேசும்போது, கோவையில் இருந்து பழனி வரை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஈச்சனாரி, ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கடவு, தாமரைக் குளம், கோவில் பாளையம், மற்றும் பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலம்பட்டி, திப்பம்பட்டி, கோமங்கலம் புதூர் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும். குறிப்பாக அனைத்து பேருந்துகளும் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் சர்வீஸ் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வந்து நிறுத்த வேண்டும். தவறும் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
