tamilnadu

ஒரே தவணையில் 35% மானியம் வழங்க குறுந்தொழில் முனைவோர்கள் கோரிக்கை

ஒரே தவணையில் 35% மானியம் வழங்க குறுந்தொழில் முனைவோர்கள் கோரிக்கை

கோவை, அக்.9- ஒரே தவணையில் 35% மானியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் டாக்ட் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் ஜி. பிரதாப் சேகர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழக அரசு குறு, சிறு தொழில்களின் வளர்ச்சிக்காக இயந்திரங்கள் கொள்முதல் செய்ய 35% மானியம் வழங்கி வருவது குறுந்தொழில்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. ஆனால், இந்த மானியம் 25% முதல் தவணையாகவும், மீதமுள்ள 10% ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 2% என்ற விகிதத்தில் வழங்கப்படுவதால், முழு மானியம் பெற 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போதைய தொழில் மந்த நிலையில், நிதி திரட்டுவதில் குறுந்தொழில் முனைவோர்கள் சிரமப்படுவதால், தமிழக அரசு 35% மானியத்தை ஒரே தவணையில் வழங்க வேண்டும். மேலும், ஒரே நாடு ஒரே வரி என்று ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் ஆன நிலையில், ஒன்றிய அரசு 2025 செப்டம்பரில் புதிய ஜிஎஸ்டி விதிகளை அமல்படுத்தியது. ஜாப் ஆர்டர் செய்யும் குறுந்தொழில்களுக்கு 12% ஆக இருந்த ஜிஎஸ்டி 18% ஆக உயர்த்தப்பட்டது, தொழில்துறையினரை கடும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. உற்பத்தி சார்ந்த தொழில்கள், உதிரிபாகங்களுக்கான மூலப்பொருட்களை கொள்முதல் செய்து ஜாப் ஆர்டராக வழங்கும் முனைவோர்கள், மூலப்பொருள் கொள்முதல் அல்லது விற்பனை செய்யாத நிலையில், 18% ஜிஎஸ்டி விதிப்பு அவர்களை நிதி நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. கோவையில் மட்டும் 40,000-க்கும் மேற்பட்ட ஜாப் ஆர்டர் குறுந்தொழில் முனைவோர்களும், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான குறுந்தொழில் முனைவோர்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இத்துறையில் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, ஒன்றிய நிதி அமைச்சரும், ஜிஎஸ்டி கவுன்சிலும் உடனடியாக ஜாப் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டி-யை 5% ஆக குறைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.