சட்டங்களை முறையாக பின்பற்ற அறிவுறுத்தல்
கோவை, ஆக.21- உணவு பாதுகாப்பு சட்டங்களை முறையாக பேக்கரி உரிமையாளர் பின்பற்ற வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தெரிவித்துள்ளார். கோவை, டாடாபாத் பகுதியிலுள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்க கூட்டரங்கில், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் மற்றும் விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தலைமையில் நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, பேக்கரியில் உணவுப் பொருட்கள் தயாரிப்பது, விநியோகிப்பது, கழிவுகளை சுத்தமாக அப்புறப்படுத்துவது, உணவு பாதுகாப்பு சட்டம் 2006 ல் உள்ள விதிகள் மற்றும் அதனை பின்பற்றுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதேபோல பேக்கரி உரிமையாளர்களுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். இதன்பின் உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா பேசுகையில், பேக்கரி உரிமையாளர்கள் கடைகளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்? இருப்பு வைப்பது, தயாரிப்பு முறை, விற்பனை மற்றும் கழிவுகளை எவ்வாறு முறையாக அகற்ற வேண்டும் போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இனி வரும் காலங்களில், பேக்கரி உணவுகள் தொடர்பாக குறைகள் இருந்தால் மக்கள் புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் குறித்து 48 மணி நேரத்தில் விசாரணை மேற்கொண்டு அதன் விபரங்களை புகார் தாரர்களுக்கு வழங்கப்படும். உணவு பாதுகாப்பு சட்டங்களை முறையாக பின்பற்றி, உணவுப் பொருட்களை தயார் செய்ய வேண்டும். தற்போது பண்டிகை காலம் வருவதால் அடுத்த மாதம் இனிப்பு, காரம் உற்பத்தி நிறுவனங்களில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம், என்றார்.