tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

மாவட்ட ஆளுநர் அலுவல்  வருகை தின நிகழ்ச்சி

பாபநாசம், செப். 24-  அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி கிளப் சார்பில், மாவட்ட ஆளுநர் அலுவல் வருகை தின நிகழ்ச்சி நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில், கிளப்பின் தலைவர் சங்கர் வரவேற்றார். சேவை அறிக்கையை செயலாளர் கோபால் வாசித்தார். உதவி ஆளுநர் சுப்ரமணியன் முன்னிலை வகித்து, ஆளுநரை அறிமுகம் செய்து வைத்தார். மாவட்ட ஆளுநர் லியோன் பேசி, மாகாளிபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பட்டுக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு தலா ரூ.10,000 மதிப்பிலான பீரோவை வழங்கினார்.  இதில் முன்னாள் உதவி ஆளுநர் காதர் பாட்சா, இதயத்துல்லா, பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் முருகவேலு உட்பட பலர் பங்கேற்றனர். கிளப் பொருளாளர் சுதாகர் நன்றி கூறினார்.

விளக்குடியில்  கதண்டு கடித்து 30 பேர்  மருத்துவமனையில் அனுமதி

திருத்துறைப்பூண்டி, செப். 24-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா விளக்குடி பகுதியில் விளக்குடியில் இருந்து மணலி செல்லும் சாலையில் உள்ள பனை மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள், அந்த வழியாகச் சென்ற 30-க்கும் மேற்பட்டோரை தாக்கியுள்ளது.  இந்த சாலையில் பயணித்த முதியவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் தாக்கியுள்ளதுடன், 10-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி உள்ளது. கதண்டு தாக்கியத் தொடர்ந்து, அவர்கள் அருகில் உள்ள விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதுகுறித்து, தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைவாக சம்பவ இடத்திற்குச் சென்று, பனை மரத்தில் கட்டி இருந்த கதண்டு கூட்டினையும், கதண்டுகளையும் தீயிட்டு அழித்தனர்.