கிரிப்டோ காயின் என்கிற பெயரில் மோசடி: பணம் இழந்தவர்கள் மாநகரக் காவல் அலுவலகத்தில் புகார்
திருப்பூர், ஆக.27- கிரிப்டோ காயின் என்ற பெயரில் ரூ.46 லட்சத்து 84 ஆயிரம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகரக் காவல் அலுவலகத்தில் செவ்வாயன்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து 15க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் செவ்வாயன்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் வாவி பாளையத்தில் எஸ்.கே.ஆர். கன்சல்டன்சி ஏஜென்சி செயல் பட்டு வந்தது. பொம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த செந் தில்குமார் என்பவர் நடத்தி வந்தார். கிரிப்டோ காயினில் முத லில் ஒரு லட்சம் கட்டினால் மாதம் ரூ.12 ஆயிரம் வரும். 17 மாதத் திற்குப் பிறகு கட்டிய பணம் முழுவதும் திரும்ப கிடைக்கும் என தெரிவித்தார். அதை நம்பி எங்கள் குழுவை சேர்ந்த 13 பேர் ரூ.46 லட்சத்து 84 ஆயிரம் பணம் கட்டி உள்ளோம். ஒவ்வொரு மாதமும் கிரிப்டோ காயின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், நாங்கள் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த தொகை மற்றும் அவர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி நகை மற்றும் வீட்டு பத்திரங்களை அடமானம் வைத்து பணத்தை கொடுத்துள்ளோம். எங்களுக்கு அதில் லாபம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எங்கள் அனைவருக்கும் கொடுத்த தொகை மீட்டுக் கொடுக்க வேண்டும். மேலும் இது போன்ற ஆசை வார்த்தை கூறி ஏமாற்றும் செந்தில்குமாரை கைது செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.