tamilnadu

தருமபுரியில் தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

தருமபுரி, ஏப். 29-தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில் பணியின் போது மது அருந்தியிருந்த தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவிட்டார்.தருமபுரி மக்களவைத் தேர்தல், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தருமபுரியை அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. இந்தத் தேர்தல்களில் பதிவான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அக்கல்லூரியில் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு கேரமா மூலம்வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் வாக்கு எண்ணும் மையம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாக்கு எண்ணும்மையத்தில் கடந்த 27-ஆம் தேதி பென்னாகரம் காவல் நிலைய தலைமைக் காவலர் முருகேசன் (50) பணியிலிருந்தார். அப்போது வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்ய வந்த தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தம்மாள், தலைமைக் காவலர் முருகேசனிடம் விசாணை மேற்கொண்டார். அப்போது, அவர் மது அருந்தியிருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பரிசோதனைக்கு முருகேசனை உட்படுத்தினர். அதில் அவர் மதுஅருந்தியிருந்தது உறுதிபடுத்தப்பட்டது. இது தொடர்பான மருத்துவ அறிக்கையை காவல் ஆய்வாளர் சாந்தம்மாள், தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜன், தலைமைக் காவலர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தவிட்டார்.

;