மே.பாளையம், ஏப். 28-காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஊராட்சி பெண் ஊழியர்கள் அளித்த புகாரையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்த கோவை மாவட்ட ஆட்சியர், அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன். இவர் மீது ஏற்கனவே பஞ்சாயத்து நிதியினை தவறாக கையாண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், காராமடை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் விதிகளை மீறி வீட்டு மனை அங்கீகாரம் வழங்குதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் மற்றும் சத்துணவுபெண் ஊழியர்கள் சிலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தங்களிடம் தரக்குறைவாக நடக்க முயற்சிப்பதாகவும், ஒழுக்க கேடாக பேசுவதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் நேரில் புகார் மனு அளித்தனர். இதனையடுத்து, ரவிச்சந்திரனை வட்டார வளர்ச்சி அலுவலர் பதவியில் இருந்து விடுவிப்பு செய்து உத்தரவிட்ட ஆட்சியர், புகாரின் மீது உடனடியாக உரிய விசாரணை செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ஊராட்சி நிதியில் முறைகேடு செய்ததாக புகாருக்கு உள்ளான ரவிச்சந்திரன் மீது விசாரணை நடைபெற்று வரும்நிலையில், தற்போது இவர் மீது பெண் பணியாளர்களும் புகார் அளித்துள்ளது மற்றும் இவர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டதும் ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஊழல் குற்றச்சாட்டு மற்றும் பெண் ஊழியர்களின் புகார் குறித்து இரு வேறு விசாரணைகள் முடிவடைந்து அதன் அறிக்கை கிடைத்த பின்னர் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.