tamilnadu

img

தனியார் பைனான்சில் 814 சவரன் நகை கொள்ளை

கோவை, ஏப். 28-கோவையில் முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை முகமூடி அணிந்த நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கோவை ராமநாதபுரம் பகுதியில் முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை மாலை ரேணுகா மற்றும் திவ்யா என்ற இரண்டு பெண் ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் அந்த நிறுவனத்திற்குள் நுழைந்து பெண் ஊழியர்கள் இருவரையும் தாக்கி நகை பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்த 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றார். முகமூடி அணிந்து வந்த நபர் தாக்கியதில் மயக்கம் அடைந்த பெண் ஊழியர்கள் சம்பவம் குறித்து தங்கள் நிறுவனஅதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முத்தூட் நிறுவனம் மற்றும் கீழே தளத்தில் இருந்த அரிசி கடை ஆகிய இடங்களில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தனர்.அதில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர்வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. அந்த காட்சிகளை கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொள்ளை சம்பவத்தில் வெளியாட்கள் ஈடுபட்டு இருப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும், இந்நிறுவனத்தில் தொடர்புடையவர்களே இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பதால், இந்த இடம் குறிந்து அறிந்தவர்களாகத்தான் இருக்க முடியும் என சந்தேகிக்கின்றனர். இதைத்தொடர்ந்து தாக்கப்பட்ட இரண்டு பெண் ஊழியர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு 2 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள்தெரிவிக்கின்றனர். பட்டபகலில்நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;