tamilnadu

img

கீச்கீச்சென்று

விலங்குகளின் ஓசை பிறப்பது,பரவுவது, அது மற்ற விலங்குகளால் உள்வாங்கப்படுவது குறித்த அறிவியல் துறை உயிர் ஒலியியல்(bioacoustics) எனப்படுகிறது.உயிர் சூழலுக்கு ஏற்படும் ஆபத்துக்களை கண்காணிக்க மட்டுமல்லாமல் விலங்குகளின் நடத்தையையும் பல்லுயிர் சூழலையும் ஆய்வு செய்யவும் இத்துறை பயன்படுகிறது.இந்தியாவில் இது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.எனவே இந்திய ஆய்வாளர்களின் திறமையை வளர்க்க ஒரு பயிற்றுப் பட்டறை திருப்பதியிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வுக் கழகம்(IISER)சார்பாக நடத்தப்பட்டது.


விலங்குகளின் ஓசைகளை பதிவு செய்வது,அவைகளை ஆய்வு செய்து தரவுகளை பகுத்தெடுப்பது போன்ற பல்வேறு முறைகள் குறித்து பயிற்றுவிக்கப்பட்டது.உலக அளவில் பிரபலமான உயிர் ஒலியியல் மென்பொருள் ‘ராவென்’ஐ பயன்படுத்துவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.ராவென் என்பது காக்கையை ஒத்த ஒரு பறவை என்பது குறிப்பிடத்தக்கது.   


அமெரிக்காவிலுள்ள கார்னெல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இந்த பட்டறையை நடத்தினார்கள். இந்தப் பல்கலைக்கழகத்திலுள்ள மெக்காலே நூலகத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய விலங்குகள் ஒலிக்களஞ்சியமும்,படிமங்களும் உள்ளன. 


இந்தப் பட்டறையின் அமைப்பாளர்களில் ஒருவரான முனைவர் வி.வி.ராபின் குழுவினர் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பறவைகளின் ஒலிகளை ஆய்வு செய்கின்றனர்.வெவ்வேறு சிகரங்களில் வசிக்கும் பறவைகளின் ஓசைகளில் உள்ள வேறுபாடுகளை ஆய்வு செய்த இந்தக் குழு, அழிக்கப்பட்ட காடுகளில் வசிக்கும் பறவை ஒலியும் மனிதர்கள் ஊடுருவாத பிரதேசங்களில் வசிக்கும் பறவை ஒலியும் முற்றிலும் வேறுபடுவதைக் கண்டறிந்துள்ளார்கள்.எனவே விலங்குகளின் நடத்தையை புரிந்துகொள்வதோடு மனிதர்களுடன் அவை புரியும் எதிர்வினையையும் ஆய்வு செய்ய உயிர் ஒலியியல் துறை உதவுகிறது என்கிறார் ராபின்.  


இந்து ஆங்கில நாளிதழ் - ஆதிரா பெருஞ்சேரி (மார்ச் 27/03/2019) 


;