tamilnadu

img

மேட்டுப்பாளையத்தில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை பலி

மே.பாளையம், ஏப். 23-மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் மின்கம்பம் அருகே இருந்த பாக்கு மரத்தை முறிக்க முயன்ற கட்டைக்கொம்பன் என்றகாட்டு யானை உயரழுத்த மின்சாரம் பாய்ந்து பலியானது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை வனப்பகுதி எல்லையருகே உள்ள பாக்கு தோப்பிற்குள் செவ்வாயன்று அதிகாலை ஆண் காட்டு யானையொன்று புகுந்துள்ளது. உணவு தேடி வந்த யானை அங்கிருந்த ஒரு பாக்கு மரத்தை முறித்து சாய்க்க முயன்றுள்ளது. பாக்கு மரத்தின் தண்டுப்பகுதியினை யானைகள் விரும்பி உண்ணும் என்பதால் மரத்தை தனது தலையால் முட்டித்தள்ளி முறிக்க யானை முயன்றது. அப்போது மரத்தின் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது மரம் சாய்ந்துள்ளது. இதனால் உயரழுத்த மின் கம்பிகள் மீது மரம் உரசிய போது மரத்தில் பாய்ந்த மின்சாரம் யானையின் உடலிலும் பாய்ந்துள்ளது. மின் அதிர்ச்சி காரணமாக பிளிரியடி யானை மரத்தை பலமாக இழுத்ததால் மின்கம்பமும் சாய்ந்து யானையின் மீதே மின் கம்பிகள் விழுந்தது. இதனால் ஏற்பட்ட மின் அதிர்ச்சி தாளாமல் யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. 


இது குறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் மின் கம்பம் அருகேஉயரமாக நீண்டு வளரும் தன்மையுடைய பாக்கு மரம் வளர்க்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் இப்பகுதியில் பெய்த சாரல் மழையாலும், மரத்தில் இருந்த ஈரம் காரணமாகவும், மரம் சாய்க்கப்பட்ட போது யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது என முதற்கட்ட ஆய்வில் தெரிய வதுள்ளது. மின்வாரிய விதிகளின்படி மின்கம்பத்தை ஒட்டி ஆபத்தை உருவாக்கும் வகையில் உயரமாக வளரக்கூடிய பாக்கு போன்ற மரங்களை வளர்க்க கூடாது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளும் விசாரணை நடத்திவருகின்றனர். 


வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் யானைகளுக்கு பிடித்தமான வாழை, பாக்கு, கரும்பு உள்ளிட்டவைகளை பயிரிடாமல் மஞ்சள், அவரை, மிளகாய் போன்றவற்றை பயிரிட தொடர்ந்து வனத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இறந்து போன யானை கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளிலேயே சுற்றி வருகிறது. நாற்பது வயது மதிக்கத்தக்க இந்தஆண் யானை சிறிய அளவிலானகொம்புகளுடன் மிக பிரமாண்டமாக காட்சியளித்தாலும் இதுவரை யாரையும் காயப்படுத்தியதில்லை எனக்கூறப்படுகிறது. விவசாய தோட்டத்திற்குள் நுழைந்தாலும் விரட்டினால் யாரையும் அச்சுறுத்தாமல் திரும்பி சென்று விடும். வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக அமைதியாக உலா வரும் இந்த யானைக்கு உள்ளூர் மக்கள் கட்டைக்கொம்பன் என பெயரிட்டு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த யானை மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளது வனத்துறையினரை மட்டுமின்றி மேட்டுப்பாளையம் பகுதி மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

;