tamilnadu

img

பழுதடைந்த சாக்கடையை சீரமைக்காத அவிநாசி பேரூராட்சி

அவிநாசி, ஏப்.23அவிநாசி பேரூராட்சி 9,11ஆவது வார்டில் பழுதடைந்த சாக்கடையை சீரமைக்காமல் அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அவிநாசி பேரூராட்சி 11ஆவது வார்டில் பகுதியில் சுமார் 300க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மக்களின் பயன்பாட்டிற்காக பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டன. தற்போது பொதுக் கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரமின்றி காணப்படுகிறது. இதனால் அருகாமையில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி குழந்தைகள் மற்றும்பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாக்கடையும் பழுதடைந்துள்ளது. இப்பகுதியிலுள்ள தரைப்பாலம் இடிந்துள்ளதால், இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடிகிறது. இதேபோல், அவிநாசி பேரூராட்சி 9ஆவது வார்டில் தெரு விளக்கு பகலில் எரிகிறது. இதுபோன்று அடிப்படை வசதிகளை சரி செய்யாமல் அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் மெத்தன போக்கை கடைபிடிக்கிறது. இதுகுறித்து முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான தேவி கூறுகையில், பொது கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும். கழிப்பிடத்திலிருந்து வரும் கழிவு நீரை குழாய் அமைத்து வெளியேற்ற வேண்டும். தரைப்பாலம் கட்டப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்பாலத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடிகிறது. நான்கு சக்கர வாகனங்கள் சென்றால் பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, பழுதடைந்த சாக்கடை, தரைப்பாலம் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், இப்பிரச்சனைகளில் பேரூராட்சி நிர்வாகம் மெத்தன காட்டினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை திரட்டி போராட்டம் நடத்தும் எனவும் தெரிவித்தார். 

;