அரசு பள்ளி வகுப்பறைக்குள் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து புகுந்ததால், மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே, கரிசல்குளம் கிராமத்தில் 10 வருடத்திற்கு மேலாக அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பருவ மழை காரணமாக அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தேங்கிய மழை நீருடன், அருகிலுள்ள குடியிருப்புகளின் சாக்கடை நீரும் கலந்து, அரசு பள்ளியின் தாழ்வான பகுதியில் புகுந்துள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் இவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக மாணவர்களின் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.