புதுதில்லி:
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்குக்கு பிறகு, பள்ளிகளை 6 கட்டங்களாக திறக்கலாம் என்றும், மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்றும் தேசியகல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில்(என்.சி.இ.ஆர்.டி.) மத்திய அரசுக்கு பரிந்துரைத்துசெய்துள்ளது.
தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலிடம்(என்.சி.இ.ஆர்.டி.) பள்ளிகள் திறப்பு மற்றும் அதன்பின்பு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகளை தெரிவிக்குமாறு மத்திய அரசு கேட்டிருந்தது. இதுகுறித்து அந்த கவுன்சில் மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை முன்வைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம் வருமாறு:
பள்ளிகளை 6 கட்டங்களாக திறக்கலாம். முதலில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கும், அதன் தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கு பிறகு9, 10 ஆம் வகுப்புகளுக்கும், 2 வாரங்களுக்கு பின் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கும், 3 வாரங்களுக்கு பிறகு 3 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கும், ஒரு மாதத்துக்கு பின் 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கும் மற்றும் 5 வாரங்களுக்கு பிறகு நர்சரி வகுப்புகளுக்கும் என நடைமுறைப்படுத்தலாம்.பள்ளிகள் திறந்த பிறகு, ஒரு வகுப்பறையில் 30 முதல் 35 மாணவர்கள் மட்டுமே இருக்கவேண்டும். ஒருவருக் கொருவர் இடையில் 6 அடி தூரம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.வகுப்பறைகளில் ஏ.சி. இருக்கக்கூடாது. அதற்கு பதிலாக கதவுகளும், ஜன்னல்களும் திறந்திருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மாணவர் பயன்படுத்தும் மேஜை மற்றும் அவர்கள் அமரும் இருக்கையில் சம்பந்தப்பட்டவர்களின் பெயரை குறிப்பிட்டிருக்க வேண்டும். காலை இறைவணக்கத்துக்கு அனுமதிக்கக்கூடாது. பள்ளிக்கு வெளியே உணவு நிலையங்கள் இருக்கக்கூடாது. மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். அதேபோல், அவர்களுடைய உடல் வெப்பநிலையையும் பரிசோதிக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் உணவு, குடிநீர் பகிர்ந்து கொள்வதை அனுமதிக்கக்கூடாது. திறந்தவெளியில் வகுப்புகளை நடத்துவது சரியாக இருக்கும். இவ்வாறு பரிந்துரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.