சென்னை:
மக்கள் விரோத, மாணவர் விரோத புதிய கல்விக்கொள்கை 2020-ஐ தமிழக அரசு நிராகரிக்கவேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்தலைவர் ஏ.டி.கண்ணன் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கொரோனா தொற்றுநோயை மத்திய அரசு ஒரு பொன்னான வாய்ப் பாகப் பயன்படுத்தி அனைத்துவிதமான மக்கள் விரோத கொள்கைகளையும் அமல்படுத்தி வருகிறது. இந்த நோக்கிலேயே இந்தியக் கல்வியைச் சீர்குலைக்கும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி இருக்கிறது.தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்ட போதே, அதன் வருகையை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்ப்பாட் டங்களும் போராட்டங்களும் நடத்தினர். இக் கல்விக் கொள்கைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழகத்திலிருந்து 25 ஆயிரம் மின் னஞ்சல் மத்திய அரசுக்கு அனுப் பப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கம் ஜனநாயக விரோதத் தன்மை கொண்டதாகவும், தீவிர தனியார்மயமாக்கலுக்கான பரிந்துரைகளோடு, மாணவர்களைக் கல்வி நிலையங்களை விட்டு விரட்டும் பல பரிந்துரைகள் இருப்பதை மக்கள் கேள்விக்கு உள்ளாக்கினர்.
மேலும் இதுபோன்ற கல்விக் கொள்கை அமல்படுத்தக் கூடாது என்றும், மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், மக்கள், அனைத்து மாநில கல்வி அமைச்சர் கள் அனைவரிடமும் கருத்துகளைப் பெற்று, ஆலோசனை நடத்தி அதன் பின்பே இக்கொள்கையை உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரினர். ஆனால் அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு, மத்திய அமைச்சரவை இந்த அபாயகரமான சூழ்நிலையைப் பயன்படுத்தி தேசிய கல்விக் கொள்கையை நிறைவேற்றியுள்ளது.
நாடாளுமன்றத்தைக் கூட்டாமல், நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தைச் சிதைத்து, அரசியலமைப்பு விழுமியங்களிலிருந்து விலகி, அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியின் உண்மையை மறுக்கும் விதமாக வகுக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான வலுவான போராட்டங்களை நடத்தப்பட வேண்டும். மேலும் இக்கல்விக் கொள்கையில் உள்ள அபாயகரமான சதித்திட்டங்களைப் பிரச்சாரம் வழியாகத் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். மத்திய மோடி அரசு மீண்டும் மக்களை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லும் விதமாக மோசமான ஒரு செயலை செய்திருக்கிறது. மாணவர் எதிர்ப்பு தேசிய கல்விக் கொள் கையை இருளில் நடைமுறைப்படுத்தும் மோடி அரசின் அசிங்கமான நடைமுறைக்கு இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும் இந்தியைத் திணித்து, மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதோடு, குலக் கல்வியை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையை அனுமதிக்கமாட்டோம் எனத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
மேலும் மோடி அரசின் மோசமான தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக அனைத்து மாவட்ட குழுக்களும், மோடி அரசே இந்தியாவை விட்டு வெளியேறு எனப் போராட் டங்களை முன்னெடுக்கவும். இக்கொள்கையில் உள்ள மோசமான, மாணவர்களுக்கு பாதகமான அம்சங்களைப் பிரச்சாரம் வாயிலாக அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.