தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கடைமடைக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் பேராவூரணி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், “பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியம் முழுவதும் விவசாயம் நிறைந்த பகுதியாகும். காவிரி நீரை நம்பி, இப்பகுதி விவசாயிகள் கொரோனா காலத்திலும், கடன் பெற்று, விதைப்பு செய்தும், சிலர்நாற்றங்காலில் விதை பாவியும் வைத்துள்ளனர். கடைமடைப் பகுதியான இங்கு, காவிரி நீர் கிடைப்பது அரிதாக உள்ளது.மேட்டூர் அணையில் போதிய அளவுதண்ணீர் இருப்பு இருந்தும், அதிகப்படியான வரத்து இருந்த போதிலும், இப் பகுதிக்கு முறை வைத்து தண்ணீர் விடுவதால், விதைத்து முளைத்த பயிர்கள்,நாற்று விட்ட பயிர்கள் கருகி விட்டன.
மாவட்ட ஆட்சியர் கடைக்கோடி பகுதிவிவசாயிகள் அவலநிலையை கருத்தில் கொண்டு, மனமிறங்கி, கடைமடை விவசாயிகள் வாழ்வு செழிக்க, கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்காலில் முறை வைக்காமல், தொடர்ந்துதண்ணீர் திறந்து விட ஆவன செய்யவேண்டும்” எனக் கேட்டுக் கொண் டுள்ளார்.