புதுதில்லி:
மத்திய அரசு ஊழியர்களை ஒருதலைப்பட்சமாக முன்கூட்டியே ஓய்வு பெறவைத்திடும், மத்திய அரசின் தன்னிச்சையான போக்கிற்கு மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார்ந்த சம்மேளனங்கள்/சங்கங்களின் கூட்டுமேடை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார்ந்த சம்மேளனங்கள்/சங்கங்களின் கூட்டுமேடையின் கூட்டம் ஆகஸ்ட் 31 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களை முற்றிலும் தன்னிச்சையான, நியாயமற்ற காரணங்களைக் கூறி, கட்டாயப்படுத்தி, முன்கூட்டியே ஓய்வு பெற வைத்திடும் நடவடிக்கைக்கு ஒருமனதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசுக் குறிப்பாணை, முப்பது ஆண்டுகள் பணிநிறைவடைந்து, 50/55வயதுநிறைந்த மத்திய அரசு ஊழியர்கள் எவராக இருந்தாலும், மத்திய அரசு விருப்பப்பட்டால், ஊழியர் ஓய்வு பெறும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே, “அரசுஊழியர் திறமையற்றவர்” என்றோ, “சந்தேகத்திற்குரிய முறையில் நேர்மையற்றவர்” என்றோ தெளிவற்ற காரணங்கள் எதையாவது கூறி, வலுக்கட்டாயமாக முன்கூட்டியே ஓய்வு பெறச் செய்வதற்கு வகை செய்கிறது.
இயற்கை நீதி மறுப்பு
இவ்வாறு ஊழியர்களை வெளியேற்று வதற்கு, அரசு அதிகாரிகளுக்கு வகைதொகையின்றி அதிகாரங்களை இந்தக் குறிப்பாணை வழங்கியிருக்கிறது. இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் அரசு ஊழியர் இது தொடர்பாக முன்கூட்டியே கேட்கப்படுவதற்கு வாய்ப்புஅளிக்கப்படவில்லை. இவ்வாறு இயற்கை நீதி அவருக்கு மறுக்கப்படுகிறது. அவ்வாறு பணியிலிருந்து வெளியேற்றப்படுபவர், விரும்பினால் இது தொடர்பாக அரசாங்கத்தால் அமைக்கப்படும் ஆலோசனைக் குழு முன்பு ஆஜராகி தன் குறையைத் தெரிவிக்கலாமாம்.மத்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, ஊழியர்கள், தொழிலாளர்கள், அவர்களுடைய சங்கங்கள் ஆகியவற்றின் அடிப்படை உரிமைகளைப் பறித்திடும் விதத்தில் அமைந்திருக்கிறது. நாட்டிலுள்ள அனைத்து தொழிலாளர்நலச் சட்டங்களையும் மாற்றி, ஊழியர்களையும் தொழிலாளர்களையும் தங்களின் அடிமைகள் போல் நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்கிற அதன்ஒட்டுமொத்த எதேச்சதிகார அணுகுமுறை யையே இது பிரதிபலிக்கிறது. தங்களுடைய உரிமைக்காகக் குரல் கொடுக்கக்கூடும் எனச் சந்தேகித்திடும் ஊழியர் எவராவது இருந்தால் அவரையும் நீக்கிவிட வேண்டும் என்கிற விதத்தில் இந்த அதிகாரங்களை அரசாங்கம் பயன்படுத்திடக்கூடும்.
தான் தோன்றித் தனத்தை தடுத்து நிறுத்துக!
அரசாங்கத்தின் இத்தகைய எதேச்சதிகார மற்றும் தான்தோன்றித்தனமான நடவடிக்கையை மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார்ந்த சம்மேளனங்கள்/சங்கங்களின் கூட்டுமேடை கண்டிக்கிறது. இந்த அரசாங்கக் குறிப்பாணையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோருகிறது. மேலும் மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும்துறைசார்ந்த சம்மேளனங்கள்/சங்கங்களின் கூட்டுமேடை அனைத்து அரசு ஊழியர்களையும் அவர்களின் அமைப்புகளையும் ஒன்றுபட்டு நின்று, அரசின் இத்தகைய எதேச்சதிகார மற்றும் தான்தோன்றித்தன மான குறிப்பாணையை உறுதியுடன் எதிர்த்திடமுன்வர வேண்டும் என்றும், அறைகூவல் விடுக்கிறது. இதற்காக இவர்கள் நடத்திடும் போராட்டங்களுக்கு நாட்டிலுள்ள ஒட்டுமொத்த தொழிற்சங்க இயக்கமும் தன் முழுமையான ஆதரவினை நல்கிடும் என்றும் உறுதி அளிக்கிறது.இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை அறிவித்துள்ளது. (ந.நி.)