tamilnadu

அதிமுக வேட்பாளர் ரூ.50 லட்சம் மோசடி

கோவை, ஏப்.11-ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரூ.50 லட்சம் மோசடி செய்து விட்டதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் புதனன்று புகார் அளித்தனர்.கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜி.பி.சக்திவேல். இவர், கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் கு.பெரியய்யாவிடம் வியாழனன்று புகார் மனு ஒன்றினை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நானும், எனது உறவினர் ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த குமரவேல் ஆகியோரும் சேர்ந்து மனையிடங்களை வாங்கி, விற்கும் எண்ணத்தோடு கடந்த 2010 ஆம் ஆண்டு இடம் தேடிக்கொண்டிருந்தோம். அப்போது படியூர் சர்வோதய சங்கத்தில் பணிபுரிந்து வந்த எங்களுக்குத் தெரிந்த கோவிந்தசாமி என்பவர் மூலம் வெங்கு என்ற ஜி.மணிமாறன் (ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்) எங்களை அனுகினார். அவர் எங்களிடம், படியூர் சிவன்மலை கிராமத்தில் தனது நண்பர்களான எஸ்.பி.செல்வம், கே.முத்துசாமி, என்.வி.முத்துசாமி ஆகிய மூவருக்கு இடம் இருப்பதாகவும்,அவர்கள் மூவரும் தனக்கு பவர்ஏஜெண்ட் அதிகாரம் கொடுத்திருப்பதாகவும் கூறி சம்பந்தப்பட்ட இடத்தைக் காட்டினார். ஆனால், விலை அதிகமாகக் கூறியதால் நாங்கள் இடம் வேண்டாம் எனக் கூறிச்சென்றுவிட்டோம். பின்னர் மீண்டும் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மணிமாறனும் அவரது நண்பர்களும் எங்களை மீண்டும் அணுகி இடத்தை விலை குறைத்துதருவதாகவும், எனவே சீக்கிரம் வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் அவர்களை நம்பிய நானும், எனது நண்பரும், மணிமாறன் கூறிய இடத்தை அதே மாதம் 7 ஆம் தேதியன்று ரூ.81 லட்சத்துக்கு கிரயம் செய்ய முடிவு செய்தோம். இதற்கு முதற்கட்டமாக அவரிடம் ரூ.40 லட்சத்தை வழங்கினோம். பின்னர் மீதமுள்ள தொகையை ஐந்து மாதங்களில் தருவதாக உறுதி அளித்தோம். பின்னர் பல்வேறு தவணைகளில் இதுவரை மொத்தம் ரூ.50 லட்சத்து 50 ஆயிரம் அளித்துள்ளோம். இந்நிலையில் கிரைய ஒப்பந்தப்படி மீதமுள்ள தொகையை கொடுத்து, இடத்தை கிரயம் பெற வெங்கு மணிமாறனை அணுகினோம். ஆனால், அவர் எங்களைச் சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதுகுறித்து வெளியில் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட இடத்தை வேறு நபர்கள் சிலருக்கு கிரயம் முடித்து கொடுத்தது தெரியவந்தது.இதுகுறித்து நானும், எனது நண்பரும் சேர்ந்து கடந்த மார்ச் 30 ஆம் தேதி மணிமாறனைச் சந்திக்கச் சென்றோம். அப்போது தனது நண்பர்கள் சிலருடன் இருந்த வெங்குமணிமாறன், எனக்கும் எனது நண்பர் குமரவேலுக்கும் கொடுக்க வேண்டிய பணத்தைத் திரும்பத் தர மறுத்தது மட்டுமல்லாமல், எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே எங்களை ஏமாற்றி ரூ.50 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த வெங்கு மணிமாறன் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

;