tamilnadu

img

மானுட சமுத்திரம் நாம் என்று கூவு- உ.வாசுகி

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக் குழுவின் அறைகூவலின்படி, உலக வன்முறை எதிர்ப்பு நாளான நவம்பர் 25 துவங்கி, டிசம்பர் 4 வரை தமிழகத்தின் இரு முனைகளிலிருந்து நடைபயணம்  ஆரம்பிக்கிறது.  தமிழகப் பெண்களை அதிகம் பாதிக்கும் இரண்டு முக்கிய பிரச்னைகளே நடைபயணத்தின் முழக்கங்கள். ஆம்… வன்முறையற்ற தமிழகம்; போதையற்ற தமிழகம் என்ற முழக்கத்தோடு, வடலூரிலிருந்து ஒரு குழுவும், திருவண்ணாமலையிலிருந்து ஒரு குழுவும் தலா ஏறத்தாழ 200 கி.மீ. நடந்து கோட்டை நோக்கி வருகிறது.  புதுச்சேரியும் இதில் உள்ளடங்கும். ஒவ்வொரு குழுவிலும் 100க்கும் மேற்பட்ட பெண்கள். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் துவக்க நாளன்று கூடுதல் பங்கேற்பு. இக்குழுக்கள் கடந்து வரும் 7 மாவட்டங்களிலும் வர்க்க, வெகுஜன, சகோதர அமைப்புகளின் உற்சாகமான வரவேற்பு காத்திருக்கிறது. வரவேற்பிலும், மக்களின் பேரன்பிலும் இதமாய் நனைவோம், நடப்போம்.

ஆபத்தான நாடு இந்தியா?
உலகில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா இருப்பதாக 2018ல் தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. அதாவது, பெண்களுக்கு உலகிலேயே மிக ஆபத்தான இடம் இந்தியா தான் என்றாகிறது. பாரத் மாதா கி ஜே என்பதெல்லாம் அரசியல் ஆதாயத்துக்கானது என்பது நிரூபணமாகிறது. மிக அதிகமான பாலியல் வன்குற்றங்கள், நீதி கிடைப்பதில் உள்ள சிக்கல்கள், குழந்தைத் திருமணம், பெண்கருக் கொலை, பெண் கடத்தல் மற்றும் குழந்தைக் கடத்தல் போன்றவையே ’முதல் இடம்’ கிடைத்ததற்கு முக்கிய காரணங்கள்.  சிரியா, ஆப்கானிஸ்தான் இரண்டாவது, மூன்றாவது இடங்களில் வந்திருக்கின்றன.   பொதுவாகவே பதிவு செய்யப்பட்டு வெளிவரும் குற்றங்களை விட அதிகமாகவே பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை நிலவும். பதிவு செய்யப்படுபவையே அதிகமாக இருந்தால், நிலைமை படு மோசம் என்று பொருள். தமிழகத்தில் 2016ஐ விட, 2017ல் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் 24% அதிகரித்திருக்கிறது. 2017ல் 3529 வழக்குகள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 45%, பாலியல் குற்றங்களாகும். தென் மாநிலங்களில் கர்நாடகம், தெலுங்கானாவுக்கு அடுத்த படியாக, குழந்தைகள் மீதான வன்முறையில்  3வது இடத்தில் தமிழகம் உள்ளது என்பது வேதனையான விஷயம்.  பதிவு செய்யப்படும் வழக்குகள் ஒரு பக்கம் அதிகரிக்கும் போது, தண்டனை விகிதாச்சாரம் 6% குறைந்துள்ளது. காவல்துறையின் அலட்சியம்; அரசியல்/பண பலத்துக்கு இரையாவது; நீண்ட காலம் ஆவதாலும், நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் மனுதாரர்களே வழக்கைத் திரும்ப பெறுவது, நீதித் துறையில் ஏற்படும் பலவீனங்கள், சட்ட உதவி கிடைப்பதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் சிரமம் போன்றவை காரணங்களாக முன்வருகின்றன.

தேரா மன்னா…
உதாரணமாக, தமிழகத்தைக் குலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கில், இரண்டு குற்றவாளிகள் குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். குண்டர் சட்டத்தை எல்லா வழக்கிலும் போட வேண்டும் என்பது நமது நோக்கம் அல்ல. ஆனால் போட்ட பிரிவுகள் ரத்து செய்யப்பட்டது கேள்விகளை உருவாக்கியது. உயர்நீதிமன்றம் தெளிவாக, காவல்துறையின் திறமையின்மை தான் குண்டர் சட்ட விடுவிப்புக்குக் காரணம் என்று கூறுகிறது. கோவை முன்னாள் எஸ்.பி.யும், தமிழக உள்துறையுமே புகார் கொடுத்த பெண்ணின் பெயரைக் கசிய விட்ட பின்னணியோடு இதனைப் பார்த்தால் சந்தேகம் வலுக்கத் தான் செய்கிறது. ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு! எத்தனையோ இயக்கங்கள், தடையை மீறித் தான் நடக்கின்றன. மன்னர் ஆட்சியிலேயே ஒரு குடிமகள், தேராமன்னா செப்புவதுடையேன் என்று சொன்ன வரலாற்றைப் படித்திருக்கிறோம். அப்படி இருக்க,  ஒரு ஜனநாயக நாட்டில் ஏன் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை? கேள்வியும், கேட்கும் அமைப்புகளும் ஆட்சியாளர்களை அச்சப்படுத்துகின்றனவோ? 

போக்சோ பிரிவுகள் காவல்துறைக்குத் தெரிகிறதா இல்லையா என்பதே புரியவில்லை. செயல்பாட்டாளர்களுக்கு இருக்கும் சட்ட ஞானம், காவல்துறையின் பல மட்டங்களுக்கு ஏன் இல்லை?
அண்மையில் சேலம் ஓமலூர் அருகே இரண்டாம் வகுப்பு மாணவி கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார். ஆண் காவலர்கள் சீருடையில் வந்து, பெற்றோரை வெளியே அனுப்பி விட்டு விசாரணை செய்திருக்கிறார்கள். ஆண் காவலர்கள் விசாரிக்கக் கூடாது, விசாரணையின் போது சீருடை அணிந்திருக்கக் கூடாது, பெற்றோர் அருகில் இருக்க வேண்டும் என்ற 3 முக்கியமான விதிகளும் ஒரே நேரத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

வீட்டில் தண்ணீர் குழாய் இல்லை என்பதால் அடிக்கடி தண்ணீர் எடுக்கப் போகும் வீட்டில் இருந்த நபர், தன் இச்சைக்குப் பணியவில்லை என்பதால், கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஆத்தூர் தலித் சிறுமியை மறந்திருக்க முடியாது. அன்றைய ஆட்சி தலைவர் குழாய் பதித்துத் தருகிறேன், சாலை போட்டுத் தருகிறேன் என்று கொடுத்த எந்த வாக்குறுதியும் இன்று வரை நிறைவேறவில்லை. கிடைத்த இழப்பீட்டில் பெரும் பகுதி வழக்கு வாய்தாவுக்கு சாட்சிகளை அழைத்துச் செல்லும் செலவு – போக்குவரத்து, உணவு போன்றவை தான் என்று பெற்றோர் கூறினர். எஸ்.சி., எஸ்.டி. சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்தால், சாட்சிகளை அழைத்து வரும் செலவு, பாதுகாப்பு இரண்டும் காவல்துறை/அரசு தான் செய்ய வேண்டும். அதுவும் நடப்பது கிடையாது.

இதே சேலத்தில் பாலியல் வல்லுறவு செய்து, கொன்று, அண்டாவுக்குள் அடைத்து வைக்கப்பட்ட 6 வயது சிறுமியின் பெற்றோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. கும்பல் பாலியல் வல்லுறவு, கொலை செய்து, மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்ட சிறுமியின் மரணத்துக்கும் நியாயம் கிடைக்கவில்லை. இது முதல்வரின் சொந்த ஊர் இருக்கும் சேலத்தின் அண்மைக்கால கதை. 
இப்படிப் பல்வேறு மாவட்டங்கள்.

93.6% வழக்குகளில் குற்றவாளி, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு/சிறுமிக்கு அறிமுகமானவரே. குறிப்பாக, தந்தையே மகளைப் பாலியல் வல்லுறவு செய்யும் புகார்கள் கூடுதலாகிக் கொண்டிருக்கின்றன.
சட்ட ரீதியான நிதி உதவி பலருக்குத் தெரிவதில்லை. கிடைப்பதும் இல்லை. குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வரும் வழக்குகளில் ஓரளவு தலையிடுகின்றனரே தவிர, சட்ட அந்தஸ்தைப் பயன்படுத்தி, தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது, அரசைத் தலையிட நிர்ப்பந்திப்பது, கொள்கை மற்றும் நடைமுறையைக் கேள்வி கேட்பது போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவதில்லை. விழிப்புணர்வு பிரச்சாரம் எதுவும் அரசின் நிகழ்ச்சி நிரலிலேயே இல்லை.

18 வயதுக்கு மேலான பெண்கள் மீது நடக்கும் குற்றங்களும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன. வருடத்துக்கு சராசரியாக 40,000 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள். பிணத்தைப் பிய்த்துப் பிய்த்துப் தின்னும் கழுகுகள் போல, பெண்ணின் உடலையும், மனதையும் ஆணாதிக்கமும், போதையும் குதறிப்போடுகின்றன. காவல்நிலைய படிக்கட்டுகள் மிரட்டுகின்றன. நீதிமன்றத்தின் வாசலோ நிரூபணம் கேட்கிறது. பலவற்றில் ஏழை சொல் அம்பலம் ஏறுவதில்லை என்பது உண்மை. ஆம், வன்முறைக்கும் வர்க்க பரிமாணம் உண்டு. 

வெற்று முழக்கங்கள்
அனைத்தும் தனியார் மயம், வேலையின்மை, நிரந்தரப் பணி சுருக்கப்பட்டு பெருகி வரும் அவுட் சோர்சிங் போன்ற நடவடிக்கைகள் வன்முறை அதிகரிக்கக் களம் அமைத்துக் கொடுக்கின்றன. அரசு செய்யும் ஒரே சேவை சாராயம் விற்பது என்றாகி விட்டது. போதைப் பழக்கமும், ஆபாச வலைத்தள பக்கங்களும் சிக்கலைத் தீவிரப்படுத்துகின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும் மோடி அரசோ, வசனம் பேசியே ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கிறது. மகளையும், மருமகளையும் பாதுகாப்போம் என்ற முழக்கமும் சரி, தேசத்தைக் காப்போம் என்ற முழக்கமும் சரி வெறும் வெத்து வேட்டு தான். சமீபத்திய தேர்தல்களில் பாஜக தள்ளாடுவது, இந்த முழக்கங்களை மீறி, வயிற்றுப்பாடு முன்னுக்கு வந்த யதார்த்தமே.

கடலூர் நகரத்தை ஒட்டி அமைந்துள்ள பாதிரிக்குப்பம் தலித் குடியிருப்பில், பெண்களை சந்தித்து உரையாடச் சென்ற போது, ஒரு பெண் சொன்னார் – ரேஷன் அரிசி தான் ஒரு வேளை கஞ்சி குடிக்கவாவது உதவுகிறது. கஞ்சியும், அவித்த பச்சைமிளகாயும் தான் பெரும்பாலும் எங்கள் உணவு. ஒரு நாள் சாம்பாருக்கு ஆசைப்பட்டால், வாங்கிய கடனுக்குத் தவணை கட்ட முடியாது. ரேஷனில், ஏதோ அரிசிக்கு பதிலாகப் பணம் கொடுக்கப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டோம். சொற்ப பணத்தை வைத்துக் கொண்டு, மார்க்கெட்டில் அரிசி வாங்கும் அளவு நிலைமை இல்லை. அரிசி கொடுப்பது நீடிக்க வேண்டும், நீங்கள் போராடும் போது, எங்களது இந்தக் கோரிக்கையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார். புனித ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்திருப்பவர்களுக்கு இதெல்லாம் தெரியுமா? 
வறுமையே மிகப்பெரிய வன்முறை.

இந்த நெருக்கடியான சூழலில், இலக்கு வைத்து சாராயம் விற்கும் அரசை என்னவென்று சொல்வது? ரோம் பற்றி எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னன் தோற்றான், போங்கள். சாதிய அமைப்புகளில், மத வெறி அமைப்புகளில் வாள் சுழற்றும் நபர்களுக்குத் தெரிவதில்லை, அவர்கள் வெறும் பகடைக்காய்கள்; தலைவர்கள் தரணி ஆள தேவைப்படும் ஏணிப்படிகள் என்பது. அதிகம் வலைத்தள ஆபாசங்களை அரங்கேற்றுவது இவர்கள் தான். இந்தத் திரை விலக வேண்டும். இவை குறித்து அரசாங்கங்கள் கவலைப்படுவதில்லை. ஊழலும், குதிரை பேரமும் அவர்கள் ஆயுளின் அதிக நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. ஆளும் வர்க்கத்தின் ஒட்டுமொத்த சந்தர்ப்ப வாதம் மகாராஷ்டிரத்தில் பளிச்செனத் தெரிகிறது. விவசாயிகள் கால் தேய நடந்தார்களே, செங்கொடி தவிர வேறு யார் அவர்களோடு நின்றது? இன்றைக்கு அதிகாரத்தில் பங்கு போட ஓடியாடும் கட்சிகள், அன்று நடந்தே வந்த விவசாயிகள் பற்றி எங்கே கவலைப்பட்டார்கள்?

இதற்கிடையே தமிழகத்தின் நலனுக்காக, தேவைப்பட்டால் நாங்கள் ஒன்று சேருவோம் என்ற குரல்கள் எழுகின்றன. ஒரு வாரம் முழுவதும் ஊடங்கங்களின் ஆகப்பெரிய கவலையாக அதுவே இருந்தது. ‘தமிழகம்’ என்றால் முதலாளிகளா, பெருநில உடமையாளர்களா, பெரு வணிகர்களா, சாராய வியாபாரிகளா அல்லது உழைக்கும் மக்களா? தமிழக நலனுக்காக என்ன திட்டம் கையில் இருக்கிறது? வாழ்க்கையின் கடந்து வந்த காலங்களில் தமிழக நன்மைக்கு செய்தது என்ன? வெற்றிடத்தை நிரப்ப வருகிறோம் என்னும் போது இத்தகைய கேள்விகள் இயல்பாக  எழுகின்றன. அவை விவாதத்துக்குரிய விஷயங்களே.. மாற்றம் என்பது நபர்களா? இல்லை, கொள்கைகள் என்று ஜனநாயக மாதர் சங்கம் உறுதியாய் நம்புகிறது.

கைகள் உயரட்டும்; தலைகள் நிமிரட்டும்
தமிழகத்தில் கடந்த 46 ஆண்டுகளாகப் பெண்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளில் நியாயம் கிடைக்கப் போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயக மாதர் சங்கம் 10 நாட்கள் நடைபயணத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து உரையாட உள்ளது. வெள்ளை சிவப்பு சீருடை அணிந்து, வெண்கொடிகளை உயர்த்திப் பிடித்து, ஆளுவோருக்கு சவால் விட்டு, அன்புக்குரிய மக்களோடு கை குலுக்கி மண்ணதிர நடை போடுகிறது. ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம் என்ற  மகாகவியின் வரிகளை ஏற்று, மானுட சமுத்திரம் நாம் என்று பாரதிதாசனின் வசீகர கவிதையால் கூவியழைக்கிறது.  புரட்சி என்பது பூகம்ப வேகம்… புரட்சி என்பது பூரண மாற்றம்.. புரட்சி என்பது புரட்டின் வைரி…

புரட்சி என்பது பூமித்தாய் நகைப்பு என்ற தோழர் ஜீவாவின் அற்புத வரிகளை ஆயுதமாக்கிக் கொண்டு புறப்படுகிறது. பெண் சமத்துவ மாண்புகளைப் பாதுகாக்க, வன்முறையற்ற வாழ்வினை சொந்தமாக்க, மாற்றத்துக்கான சிந்தனைகளைச் சிதைக்கும் பொல்லாத போதையை ஒழித்துக் கட்ட, சாதிவெறி, மதவெறியைத் தூக்கி எறிந்து  நடக்கும் ஒற்றுமைப் பயணம்….. வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள் என்ற வர்ணனைகளைப் புறந்தள்ளி, பூங்கொடியல்ல நாமெல்லாம் போர்க்கொடி என்று  புறப்படும் பயணம்.  
இணையுங்கள்… சாதி, பாலினம், வர்க்கம் என்ற அடிப்படையில் சுரண்டப்படும் பெண்களின் உரிமை என்பது ஜனநாயகத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதி என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் சரியாக வரையறுக்கிறது. 
இணையுங்கள்….பெண்ணடிமை தீருமட்டில் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்தல் முயற்கொம்பு. 
இணையுங்கள்…..தொழிலாளி வர்க்கம், இதர சுரண்டப்படும், ஒடுக்கப்படும் வர்க்கங்களின் விடுதலைக்கும் குரல் கொடுக்க வேண்டும். 
இணையுங்கள்… சமுதாயத்தின் சரி பாதிக்கு சம நீதி கிடைக்காமல் சமத்துவ சமூகத்தை உருவாக்க முடியாது.
இணையுங்கள்….வன்முறை குறித்த மவுனத்தை உடைப்போம். 
வீதிகள் அதிரட்டும்… 
விடுதலை பிறக்கட்டும்!

 

;