tamilnadu

img

வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்.பி.க்கள் குடைச்சலாக மாறினர் உ.பி. மாநிலத்தில் விழிபிதுங்கும் பாஜக!

லக்னோ, ஏப். 3 - உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. இதைப் பயன்படுத்திக் கொண்டு, 71 இடங்களில் பாஜக வென்றது. இதற்கு மோடி அலையே காரணம் என்றும் கூறிக் கொண்டது.ஆனால், இம்முறை சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பதால், பாஜக முன்புபோல இடங்களைப் பெற முடியாது என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்தபோதே, இது தெரிந்து விட்டது. உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் கோரக்பூர், துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியாவின் பூல்பூர் ஆகிய தொகுதிகளிலேயே பாஜக தோற்றது. இதனால் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக-வினர் பயந்துபோய்க் கிடக்கின்றனர். இந்நிலையில், பாஜக-வில் மீண்டும் சீட் கிடைக்காத சொந்த கட்சி எம்.பி.க்களே, பாஜக-வுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளனர்.உத்தரப்பிரதேசத்தில் தற்போதைய எம்.பி.க்கள் 16 பேருக்கு பாஜக மீண்டும் வாய்ப்பளிக்காத நிலையில் இவர்களில் ஆஷீல் வர்மா மற்றும் ஷியாமா சரண் குப்தா ஆகியோர் அகிலேஷின் சமாஜ்வாதியில் இணைந்துள்ளனர். மற்றொரு எம்.பி.யான அசோக் டோரே காங்கிரசில் இணைந்துள்ளார். இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஆதரவான வாக்குகளை, தாங்கள் புதிதாக இணைந்த கட்சிகளுக்கு பெற்றுத்தரும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பாராபங்கி தொகுதி பாஜக எம்.பி.யான பிரியங்கா ராவத் தமக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு பொதுக்கூட்ட மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுததுடன், பாஜக மீதும் புகார்களை அடுக்கினார். அப்போது, சுயேட்சையாகப் போட்டியிடுங்கள்; பாஜக-வை பழிவாங்குவோம் என்று ராவத்தின் ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். இது ராவத்தை உற்சாகப்படுத்தி, பாஜக-வுக்கு எதிராக திருப்பியுள்ளது.பலியா தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பரத் சிங், தனது அதிருப்தியை பாஜக தலைமைக்கு கடிதமாகவே எழுதி விட்டார். அதில் தனது தொகுதி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த பரத் சிங், பலியா தொகுதியின் பாஜக வேட்பாளர் விரேந்தர் மீதும் குற்றச்சாட்டுக்களையும் அள்ளிக் குவித்துள்ளார்.இவர்கள் தவிர அன்சுல் வர்மா, கிருஷ்ணா ராய், அஞ்சு பாலா மற்றும் அசோக் டோரா ஆகிய தலித் எம்.பி.க்களும் ஏற்கெனவே பாஜக-வுக்கு எதிராக பிரச்சாரத்தைத் துவக்கி விட்டனர். இவர்களில் சாவித்ரி பாய் பூலே எம்.பி. பாஜக-விலிருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்திருப்பதால், அவர் பாஜக-வுக்கு எதிராக, தலித் வாக்குகளைத் திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.பாஜக-வின் மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா ஆகியோருக்கும் பாஜக வாய்ப்பு வழங்காத நிலையில், இவர்களின் ஆதரவாளர்களும் பாஜக-வுக்கு எதிராக கங்கனம் கட்டி வருகின்றனர்.இதனால், எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பதா, சொந்த கட்சியினரைச் சமாளிப்பதா? என்று தெரியாமல், பாஜக விழி பிதுங்கி நிற்கிறது.

;