சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆவேசம் மதுரைக் கிளையில் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
சென்னை, செப்.9- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டவர் விஜயா கே.தஹில் ரமணி. இவரை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தது. இந்த முடிவால் தஹில் ரமணி அதிருப்தியடைந்த நிலையில், அதை மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியத்திற்கு கடிதம் அனுப்பி னார். ஆனால், அந்த கோரிக்கையை கொலிஜியம் ஏற்காத நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குடியரசு தலைவருக்கும் ராஜி னாமா கடிதத்தை அனுப்பினார். இந்த கடிதத்தின் மீதான முடிவு தெரியும் வரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிகளை மேற்கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. திங்களன்று அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பணியிட மாற்றம் செய்வது நியாய மற்றது என அகில இந்திய வழக்கறி ஞர் சங்கம் உட்பட வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொலிஜியத்தின் முடிவைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முன்பு திங்களன்று(செப்.9) வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மூத்த வழக்கறி ஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர்.வைகை உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
பழிவாங்கும் செயல்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் வைகை, “உச்சநீதிமன்றம் ஒருதலைப்பட்ச மாக செயல்பட்டு வருகிறது. கொலி ஜியத்தின் செயல் கன்னத்தில் அறைந் தது போல் உள்ளது” என்றார். தலைமை நீதிபதிக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொட ரும் என தெரிவித்த அவர், உச்ச நீதிமன்ற கொலிஜியம் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருக்கிறது என்றும் இது ஒரு பழிவாங்கும் செயல் என்றும் வைகை கூறினார். இந்நிலையில், தலைமை நீதிபதி தஹில் ரமணி திங்களன்று(செப்.9) வழக்கமான நீதிமன்ற பணிகளுக்கு வராத நிலையில், அவரது அமர்வில் விசாரணைக்காக ஏற்கெனவே பட்டியலிடப்பட்டிருந்த 75 வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் ஆகியோர் அடங்கிய இரண்டாவது அமர்வுக்கு பட்டியலிடப்பட்டன. தலைமை நீதிபதி தஹில் ரமணி, நீதிபதி துரைசாமி அமர்வில் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் மட்டும் இரண்டாவது அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட அறி விப்பில் தெரிவிக்கப்பட்டது. முதலாவது அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி துரை சாமி தனியே வழக்குகளை விசாரிப்பார் என்றும் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று புறக்கணிப்பு
இதனிடையே, தலைமை நீதிபதி தஹில் ரமணி மேகாலயாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, செவ்வாயன்று (செப்.10) நீதிமன்ற புறக்கணிப்பு போராட்ட த்தை நடத்துகிறோம் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் தெரிவித்துள் ளார். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் செப்டம்பர் 10 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இறங்கி யுள்ளனர்.
சட்ட அமைச்சர் சந்திப்பு
இதனிடையே, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமை நீதிபதி தஹில் ரமணியின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்ததாக கூறப்படுகிறது. சுமார் 10 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்ற தாகவும் தெரிகிறது.