tamilnadu

img

நாகரிகங்களின் எழுச்சிக்குப் பிறகே பெருந்தெய்வங்கள் தோன்றின - ஹார்வி வைட்ஹவுஸ்

பாரம்பரியச் சடங்குகள் இருந்து வருகின்ற ஒரு சமூகம் வளர்ந்து மிகப் பெரிய சமூகமாக மாறிய பிறகே, அச்சமூகத்தில் இருக்கின்ற பல்வேறுபட்டவர்களைக் கண்காணித்து அவர்களை ஒழுங்குபடுத்துகின்ற வகையில் பெருந்தெய்வங்கள் தோன்றின என்று அண்மையில் நேச்சர் இதழில் பதின்மூன்று ஆய்வளார்கள் ஒன்றிணைந்து எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

நேச்சர் இதழில் வெளியான அந்த ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம்: 

 

உலகம் முழுவதிலும் உள்ள பன்மயச் சமூகங்கள் நல்லொழுக்கப்படுத்துகின்ற கடவுள்களுக்கு முந்தையவையாகவே இருக்கின்றன

ஹார்வி வைட்ஹவுஸ், பீட்டர் ஃப்ரான்ஸ்வா, பேட்ரிக் இ. சாவேஜ், தாமஸ் இ.கர்ரி, கெவின் சி. ஃபீனி, என்ரிக்கோ சியோனி, ரோஸலிண்ட் பர்செல், ராபர்ட் எம். ரோஸ், ஜெனிபர் லார்சன், ஜான் பெய்ன்ஸ், பாரேண்ட் டெர் ஹார், ஆலன் கோவி மற்றும் பீட்டர் டச்சின் ஆகியோர்

நேச்சர் இதழின் கடிதப் பகுதி, 2019 மார்ச் 20

 

மதம் மற்றும் பன்மயச் சமூகங்களின் தோற்றங்கள் பரிணாமப் புதிர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையிலேயே இருக்கின்றன. மிகப் பெரிய அளவிலான சமூகங்களில், முன்பின் அறிந்திராதவர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை எளிதாக்குகின்ற வகையில் 'நல்லொழுக்கப்படுத்துகின்ற தெய்வங்கள்' இருக்கின்றன என்பதாக இந்த இரண்டு புதிர்களுக்கும் தீர்வு காண்பதாக ஒரு கருதுகோள் இருக்கின்றது. அது கலாச்சாரரீதியாக உருவான, தார்மீகநெறி சம்பந்தப்பட்டதாக இருக்கின்ற இயற்கையை மீறியவற்றை நம்புவதாகவே இருக்கின்றது. முந்தைய ஆய்வுகளின் மூலமாக, நல்லொழுக்கப்படுத்துகின்ற தெய்வங்கள் மற்றும் பன்மயச் சமூகம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகள் விளக்கப்பட்டிருந்த போதிலும், இவை இரண்டிற்குமிடையிலான தொடர்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.

உலகளாவிய விரிவான தரவுகள் கிடைப்பதில் உள்ள சிரமங்கள் இதுவரையிலும் அந்த கருதுகோளின் காரண காரியங்களை நிறுவுவதற்குத் தடையாக இருந்து வந்தன. இந்த தடைகளைத் தகர்க்கும் வகையில், உலக அளவில் 30 பகுதிகளில் கடந்த 10,000 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கும் 414 சமூகங்களில் இருந்து, 51 வகையான சமூகச் சிக்கல்கள், 4 வகையிலான இயற்கையை மீறிய வகைகளில் ஒழுக்க நெறியைச் செயல்படுத்துதல் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கிடைத்திருக்கும் ஆவணங்களை முறைப்படியாக இங்கே பதிவு செய்துள்ளோம்.

இதையொட்டி எங்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பகுப்பாய்வுகள் நல்லொழுக்கப்படுத்துகின்ற தெய்வங்கள் மற்றும் பன்மயச் சமூகங்களுக்கிடையிலான தொடர்பை உறுதிப்படுத்துவதாக மட்டும் இருக்கவில்லை. அவை பன்மயச் சமூகங்கள் பெருமளவில் அதிகரித்த பின்னரே நல்லொழுக்கப்படுத்துகின்ற தெய்வங்கள் தோன்றின என்ற கருத்தை வெளிப்படுத்துகின்ற வகையிலும் இருக்கின்றன. இதற்கு முன்பாக இருந்து வந்த கணிப்புகளுக்கெல்லாம் மாறாக, எங்களுடைய ஆய்வுகளின் வழி லட்சக்கணக்கான மக்களைக் கொண்ட மிகப் பெரிய சமூகங்கள் தோன்றிய பின்னரே சக்தி வாய்ந்த நல்லொழுக்கப்படுத்துகின்ற 'பெருந்தெய்வங்கள்', சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயற்கையை மீறிய தண்டனைகள் போன்றவை தோன்றியதாகத் தெரிய வந்திருக்கிறது. இந்த நல்லொழுக்கப்படுத்துகின்ற தெய்வங்கள், பன்மயச் சமூகங்கள் உருவாவதற்குத் தேவைப்படுகின்ற முன்நிபந்தனையாக இருக்கவில்லை. ஆனால் அவ்வாறான சமூகங்கள் நிறுவப்பட்ட பிறகு, பல இனக் குழுக்களைக் கொண்ட அந்த பன்மயச் சமூகத்தை தக்கவைத்துக் கொண்டு, அவற்றை விரிவாக்கம் செய்து கொள்ள அந்தக் கடவுள்கள் உதவுவதாக இருக்கின்றன.

பொதுவாக பெருமளவில் மக்கள் தொகை கொண்ட மதம் சார்ந்த பாரம்பரியங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதை எளிதாக்கும் வகையிலான சடங்குகள், நல்லொழுக்கப்படுத்துகின்ற தெய்வங்களின் தோற்றத்திற்கு முன்னதாகவே தோன்றியிருக்கின்றன. மத நம்பிக்கைகளை விட பன்மயச் சமூகத்தின் ஆரம்ப எழுச்சிக்கு இந்தச் சடங்கு நடைமுறைகளே, மிக முக்கியமானவையாக இருந்திருப்பது எங்களுடைய ஆய்வுகளிலிருந்து தெரிய வருகின்றது.

https://www.nature.com/articles/s41586-019-1043-4

 

இந்த ஆய்வுக் கட்டுரை வெளியான பிறகு, டவுன் டு எர்த் இதழில் அந்தக் கட்டுரை தொடர்பாக வெளியான கட்டுரையின் தமிழாக்கம்:

 

நாகரிகங்களின் எழுச்சிக்குப் பிறகே பெருந்தெய்வங்கள் தோன்றின

எகிப்திய தெய்வமாகிய சேஷாட் பெயரில் இயங்கி வருகின்ற மிகப் பெரிய தரவு தளம் ஆய்வாளர்களுக்கு உதவுவதாக இருக்கிறது

ஹார்வி வைட்ஹவுஸ் - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பேட்ரிக் இ சாவேஜ் – கியோ பல்கலைக்கழகம், பீட்டர் டச்சின் – கனெக்டிகட் பல்கலைக்கழகம், பீட்டர் ஃப்ரன்ஸ்வா – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

டவுன் டு எர்த், 2019 மார்ச் 25

 

நல்லொழுக்கத்தை வலியுறுத்துகின்ற கடவுள்கள் பற்றி நிலவுகின்ற கருத்துக்கள் உலகளாவியதாக இருக்கவில்லை என்றாலும், மதத்தைப் பற்றி நினைக்கின்ற போது, உங்களுடைய நினைவிற்கு பெரும்பாலும் நல்லவர்களுக்கு வெகுமதியும், கெட்டவர்களுக்குத் தண்டனையும் வழங்குகின்ற கடவுளே வந்து போவதாக இருக்கலாம். பகான்கள் என்று சமயப் பரப்புரையாளர்களால் நிராகரிக்கப்படுகின்ற சிறிய அளவிலான பாரம்பரிய சமூகங்களை சமூக அறிவியலாளர்கள் நீண்ட காலமாகவே மனித நடத்தைகள் பற்றிய அறநெறிகள் மீது சிறிதும் அக்கறையில்லாததொரு ஆன்மீக உலகம் என்பதாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். மனிதர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் இணக்கமாக நடந்து கொள்கிறார்களா, ஆன்மா குறித்து தங்களிடம் இருக்க வேண்டிய கடமைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்களா, தங்களுக்கிடையே போதுமான பணிவிணக்கத்தைக் கொண்டிருக்கிறார்களா என்பதின் மீதே அவர்களுடைய கவனமெல்லாம் இருந்தது.

இன்று நாம் அறிந்திருக்கக் கூடிய அனைத்து மதங்களும், அவற்றின் எண்ணற்ற திரிபு வடிவங்களும் தண்டனை தருகின்ற தெய்வங்களை நம்புகின்றவையாகவே இருக்கின்றன. அப்படியில்லையென்றாலும், குறைந்தபட்சம் கர்மா போன்ற பரந்த நுட்பத்தைக் கொண்டவையாக அதாவது நல்லவர்களுக்கு நன்மை அளிப்பததாகவும், கெட்டவர்களைத் தண்டிப்பதாகவும் இருக்கின்ற தன்மையைக் கொண்டவையாகவே அவை இருக்கின்றன. இவ்வாறான நல்லொழுக்கம் சார்ந்த மதங்கள் எவ்வாறு உருவாகின என்பது குறித்து ஆய்வாளர்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள்.

இந்தக் கேள்விகள் குறித்து இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் சில விடைகளுக்காக, ஆவணங்களைப் பாதுகாத்து வருகின்றதாக நம்பப்படுகின்ற எகிப்திய தேவதையின் பெயரில் சேஷாட் என்றழைக்கப்படுகின்ற உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய புதிய தரவு தளத்திற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

வானத்தில் இருந்து பார்க்கின்ற கண்

மிகப் பிரபலமான கோட்பாடு ஒன்று பெரிய அளவிலான சமுதாயங்களின் எழுச்சிக்கு நல்லொழுக்கப்படுத்துகின்ற கடவுள்கள் தேவைப்படுவதாக தன்னுடைய வாதங்களை முன்வைக்கிறது. சிறிய சமூகங்கள் என்பவை மீன் குடுவைகளைப் போல் இருப்பதாக அந்த வாதம் இருக்கிறது. சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அவ்வாறான சிறிய சமூகங்களில் வன்முறை, பழிவாங்கல், நீண்ட கால மதிப்பு மீதான தாக்குதல் மற்றும் சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்படுகின்ற ஆபத்து என்று பிடிபட்டு, தண்டிக்கப்படாமலே இருப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகவே இருக்கிறது. இத்தகைய சமூகங்கள் பெரியதாக வளரும் போது, நெருக்கத்தில் இருக்கின்ற அன்னியர்களிடையிலும் பரஸ்பர உறவுகள் மிகவும் சாதாரணமாக ஏற்பட்டு விடும். தாம் யாரென்று பிறருக்குத் தெரியாது என்ற நினைப்பில் தங்களைக் கண்டு பிடிக்க முடியாது என்ற நம்பிக்கை அப்போது ஏற்படுவதால், விதிகள் மீறப்படுகின்றன. இவ்வாறான நிலைமைகளில் அனைவரும் ஒருங்கிணைந்து இருப்பதற்கென்று சில கண்காணிப்பு முறைகளுக்கான தேவைகள் ஏற்படுகின்றன.

இத்தகைய கண்காணிப்புகளுக்கு இயற்கையை மீறியதாக இருக்கின்ற "வானத்தில் உள்ள கண்" கொண்டு மக்களின் மனதில் உள்ளதைக் காணக் கூடியதாகவும், தண்டனைகளையும், பரிசுகளையும் மக்களுக்கு வழங்குகின்றதாகவும் இருக்கின்ற கடவுளைவிட சிறந்தது வேறென்ன இருக்க முடியும்?. திருடுவதற்கோ அல்லது யாருக்கும் தெரிந்திராத உரையாடல்களின் மூலமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வதற்கோ கூட மக்களை இருமுறை யோசிக்க வைப்பதாக அத்தகைய கடவுள் நம்பிக்கைகள் இருக்கின்றன. இந்த கடவுள் நம்பிக்கைகளின் விளைவாக வர்த்தகர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிக்கிறது. நான் நல்லொழுக்கப்படுத்துகின்ற தெய்வத்தை நம்புகிறவன் என்பதை நீங்கள் நம்பும் போது, மதம் தொடர்பாக ஒருவரிடம் இருக்கின்ற கருத்துக்களைப் பற்றி உங்களால் அறிந்திருக்கப்படாத ஒருவரை விட, என்னுடன் வியாபாரம் செய்வதற்கே அதிகமாக விருப்பப்படுவீர்கள். வளர்ந்து, பன்மயம் கொண்டதாக மாறுகின்ற சமூகத்தில், வெறுமனே கடவுளை நம்புவதைக் குறிக்கும் வகையிலான உடல் அடையாளங்கள் அல்லது ஆபரணங்களை அணிந்துகொள்வது என்பது செல்வாக்குள்ளவர்கள் மேலும் மேலும் தங்களுடைய வளங்களைப் பெருக்கிக் கொள்வதற்கு மட்டுமல்லாது, அவர்கள் பிரபலமடைவதற்கும் உதவுகின்றது. 

மதத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடையிலான தொடர்பை ஆராய்ந்த ஆரம்பகால முயற்சிகள் அனைத்தும் மிகவும் கலவையான முடிவுகளையே வழங்கின. நிர்வாகங்களின் எழுச்சிக்கு முன்னதாகவே இயற்கையை மீறிய இவ்வாறான தண்டனைகள் பசிபிக் தீவு மக்களிடையே தோன்றி இருந்ததாகத் தெரிய வந்தாலும், சமூகப் பன்மயம் முதலில் தோன்றிய பிறகே நல்லொழுக்கமயமாக்கும் கடவுள்கள் தோன்றியதாக யூரேசிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பிராந்திய அளவிலான ஆய்வுகள் வரம்புக்குட்பட்டவையாக இருந்தன என்பது மட்டுமல்லாமல், நல்லொழுக்கப்படுத்துகின்ற கடவுள்கள் மற்றும் சமூகப் பன்மயம் ஆகியவை குறித்து ஒழுங்கற்ற அளவீடுகளையே பயன்படுத்தின என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

வரலாறு மூலம் அலசிப் பார்ப்பது

சேஷாட் தரவு தளம் இதுவரையிலும் இருந்து வந்த கருத்துக்கள் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. லட்சக்கணக்கான பவுண்டுகள் செலவில் 100க்கும் மேற்பட்ட அறிஞர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்று, அந்த தரவு தளத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கி விட்டன. இன்றைய காலகட்டத்திலிருந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் வரலாற்றுச் சமூகங்களின் மாதிரிகளைப் பயன்படுத்தி சமூகப் பன்மயம், மதம், போர், வேளாண்மை, மனித கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் பிற அம்சங்களுடன் தொடர்புடையதாகவும், இடம், காலம் ஆகியவற்றால் மாறுபடக்கூடியதாகவும் இருக்கின்ற நூற்றுக்கணக்கான மாறிகளைப் பற்றிய ஆய்வுகளைச் செய்ய உதவுவதாக அந்த தரவு தளம் இருக்கின்றது. அந்த தரவு தளம் இப்போது பகுப்பாய்வுகளைச் செய்யும் வகையில் தயார் நிலையில் இருப்பதால், உலக வரலாறு குறித்து இருக்கின்ற கோட்பாடுகளின் நீண்ட பட்டியலைச் சோதித்தறிவதற்கு நாங்களும் தயாராகவே இருக்கிறோம்.

நல்லொழுக்கம் தொடர்பான இந்தக் கடவுள்கள் பன்மயச் சமுதாயங்களின் எழுச்சிக்கு காரணமாக இருந்தனவா என்பது ஆரம்ப காலங்களிலிருந்தே இருந்து வருகின்ற கேள்வியாக இருக்கின்றது. நாங்கள் 51 வகையான சமூகச் சிக்கல்கள் மற்றும் 4 வகையிலான இயற்கையை மீறிய வகைகளில் ஒழுக்க நெறியைச் செயல்படுத்துகின்ற அளவீடுகளைப் பயன்படுத்தி உலகின் 30 பகுதிகளில் உள்ள 414 சமூகங்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தரவுகளைப் பகுப்பாய்வு செய்தோம். பெரும்பாலானோர் நினைத்து வந்ததற்கு மாறாக, உலக வரலாற்றில் பன்மயச் சமூகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்த பின்னரே, நல்லொழுக்கப்படுத்துகின்ற கடவுள்கள் தோன்றியதை வெளிப்படுத்துவதாக நேச்சர் ஆய்விதழில் வெளியாகி இருக்கின்ற எங்களுடைய புதிய ஆய்வு இருக்கின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா என்பது குறித்த அக்கறை கொண்ட கடவுள்கள் நாகரிகங்களின் ஆரம்பத்திற்கு காரணமாக இருக்கவில்லை. மாறாக அவை நாகரிகத்திற்குப் பின்னர் தோன்றியவையாகவே இருக்கின்றன.

image.png

பெருந்தெய்வங்கள் உலகில் எங்கே தோன்றின என்பது குறித்த வரைபடம் ஒன்றை எங்களுடைய ஆய்வின் ஒரு பகுதியாக நாங்கள் உருவாக்கினோம். கீழே உள்ள வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ள வட்டத்தின் அளவு குறிப்பிட்ட சமூகத்தின் அளவைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. பெரிய வட்டங்கள் பெரிய பன்மயச் சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக முதன்முதலாக அங்கே நல்லொழுக்கப்படுத்துகின்ற கடவுள்கள் பற்றிய நம்பிக்கை தோன்றியது என்பதைக் குறிப்பதாக வட்டத்தினுள் இருக்கின்ற எண்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஏற்கனவே மௌரியப் பேரரசு என்று அழைக்கப்படுகின்ற மிகப் பெரிய பன்மய தெற்காசியப் பேரரசை நிறுவிய அசோகப் பேரரசர், அதற்குப் பின்னரே ஏறத்தாழ 2,300 ஆண்டுகளுக்கு முன்னதாக பௌத்தத்தைத் தழுவினார்.


சமூகங்கள் சாதாரண நிலையில் இருந்து பன்மயத் தன்மை கொண்டதாக மாறுகின்ற போது, அதாவது ஒட்டுமொத்த மக்கள்தொகை பத்து லட்சம் பேர்களுக்கு மேல் அதிகமாகின்ற போது மட்டுமே இயற்கைக்கு மாறான தண்டனைகள் மீதான நம்பிக்கைகள் தோன்றுகின்றன என்பதை எங்களுடைய புள்ளிவிவரப் பகுப்பாய்வுகள் காட்டுகின்றன.

முதல் பெரிய நாகரிகத்தின் எழுச்சியை உந்தியிருக்கக் கூடிய பிற காரணிகள் எவையாக இருக்கும்? எடுத்துக்காட்டாக இன்றைய ஞாயிற்றுக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளைப் போன்ற தினசரி அல்லது வாராந்திர கூட்டுச் சடங்குகள் பன்மயச் சமூகங்களின் எழுச்சிகளின் ஆரம்ப காலகட்டத்தில் தோன்றியதாகவே சேஷாட் தரவுகள் தெரிவிக்கின்றன. அவற்றின் தாக்கத்தை மேலும் தேட வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.


image.png


பலவீனமான, இனரீதியாக பல்வேறுபட்ட ஒருங்கிணைப்புகளைக் கொண்ட சமூகங்களைக் கட்டமைப்பதாக உலக வரலாற்றில் நல்லொழுக்கப்படுத்துகின்ற கடவுளர்களின் செயல்பாடுகள் இருந்திருக்கும் என்றால், இத்தகைய கடவுள்கள் மீதான நம்பிக்கை இல்லாமல் போகும் போது இன்றைக்கு இருக்கின்ற சமுதாயங்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? எடுத்துக்காட்டாக ஐரோப்பிய ஒன்றியத்தைப் போன்று பிராந்திய அளவில் ஒருங்கிணைப்புகளுக்குத் தேவைப்படுகின்ற முயற்சிகளை நவீன மதச்சார்பற்ற தன்மை என்பது இல்லாமல் செய்து விடுமா? பெருந்தெய்வங்களின் மீது இருக்கின்ற நம்பிக்கைகள் அற்றுப் போகும் போது குடியேற்றம், போர், இனவெறி பரவுதல் போன்றவை நிகழும் போது பல்வேறு இனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு என்பதற்கு ஏதாவது பொருள் இருக்கக் கூடுமா? நல்லொழுக்கப்படுத்துகின்ற கடவுள்களின் செயல்பாடுகளை வேறு விதமான கண்காணிப்பு முறைகளின் மூலம் மாற்றியமைத்து விட முடியுமா?

இத்தகைய கேள்விகளுக்கான எளிதான பதில்களை சேஷாட்டால் வழங்க முடியவில்லை என்றாலும்கூட, மாறுபட்ட எதிர்காலங்களின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கான நம்பகமான வழியை சேஷாட்டால் வழங்க முடியும் என்றே தோன்றுகிறது.

 

https://www.downtoearth.org.in/news/lifestyle/big-gods-came-after-the-rise-of-civilisations-not-before-finds-study-using-huge-historical-database-63707

 

- தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு,விருதுநகர்

;