tamilnadu

img

குஜராத் ‘நரோடா கேம்’ வழக்கை சீர்குலைக்கும் பாஜக... தீர்ப்பு வெளியாகவிருந்த நிலையில் நீதிபதி எம்.கே.தவே இடமாற்றம்

அகமதாபாத்:
குஜராத் படுகொலை வழக்குகளை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான முகேஷ் காந்திலால் தவே, (எம்.கே. தவே), திடீரென இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார்.குஜராத் மாநிலத்தில், கடந்த 2002 பிப்ரவரி 28 அன்று, மோடி முதல்வராக இருந்தபோது, இஸ்லாமியர்களுக்கு எதிராக மிக மோசமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மொத்தம் 9 மிகப்பெரிய வன்முறைச் சம்பவங்களில், 11 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட ‘நரோடாகேம்’ வழக்கும் ஒன்றாகும். உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

அன்றைய மோடி அமைச்சரவையில் மாநிலபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த மாயா கோட்னானி இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியாக இருந்தார். அவருடன், முன்னாள் பஜ்ரங் தளத்தலைவர் பாபுபாய் படேல் எனப்படும் பாபு பஜ்ரங்கி, விஎச்பி முன்னாள் தலைவர் ஜெய்தீப்படேல் என 82 மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.நரோடா கேமில் 11 முஸ்லிம்களும், நரோடாபாட்டியாவில் 96 முஸ்லிம்களும் கொல்லப்படுவதற்கு ஏனைய குற்றவாளிகளுடன் இணைந்து கோட்னானி சதி செய்தார் என்பதுதான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் குற்றச்சாட்டாகும்.

இதில், 96 பேர் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா படுகொலையில் கொட்னானி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டது. ஆனால், 2018-இல் குஜராத் உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. தற்போது இந்தவழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.இதனிடையே, 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட‘நரோடா கேம்’ படுகொலை வழக்கு, தனியாக அகமதாபாத் நகர மற்றும் சிவில் அமர்வு நீதிமன்றத்தில், கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. 2018 பிப்ரவரியில் ஆதாரங்களை பதிவு செய்யத் தொடங்கியது. தற்போதுவிசாரணை முடிவடையும் கட்டத்தை வந்தடைந் துள்ளது. மாயா கோட்னானியின் வழக்கறிஞர் தனது இறுதி வாதங்களை கடந்த வாரம் தொடங்கினார்.இந்நிலையில்தான், நீதிபதி தவே, திடீரெனதெற்கு குஜராத்திலுள்ள வல்சாட் மாவட்ட முதன்மை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது தற்போதைய இடத்திற்கு பாவ்நகர் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய எஸ்.கே. பாக்சி நியமிக்கப்பட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இது வழக்கை தாமதப்படுத்தும் அல்லது நீதியை குலைக்கும் முயற்சி என்று குற்றச்சாட்டுக் கள் எழுந்துள்ளன.ஏனெனில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு, மாயா கோட்னானியின் இறுதி வாதம்மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன்காரணமாக, புதிய நீதிபதி வழக்கைப் புரிந்து கொள்ள முழு ஆவணங்களையும் ஆரம்பத்தில் இருந்து பார்க்க வேண்டும். 1,200 பக்கங்கள் கொண்ட, 187 அரசுத் தரப்பு சாட்சிகள், 60 பாதுகாப்பு சாட்சிகள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களைப் படித்தாக வேண்டும். முழு வாதத்தையும் கேட்கவேண்டும். இதன்மூலம், குறைந்தது ஒரு வருடமாவது, தீர்ப்பு தள்ளிப்போகும்.“ஏற்கெனவே 18 ஆண்டுகளாக நரோடா கேம்படுகொலை வழக்கு, நீதிக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், நீதிபதி மாற்றம், மற்றொரு பின்னடைவாகும். தாமதமான நீதி அநீதிக்கு சமம்” என்றுவழக்கறிஞர் ஷம்ஷாத் பதான் விமர்சித்துள்ளார்.

உச்சநீதிமன்ற மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட்டுள்ள- குஜராத் வன்முறை தொடர் பான ஒன்பது வழக்குகளில் நரோடா கேமில் மட்டுமே தீர்ப்பு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.முன்பு அமித்ஷா தொடர்புடைய குஜராத் வன்முறை வழக்கில் தீர்ப்பு வழங்கவிருந்த நிலையில், நீதிபதி பி.எம்.லோயா, மர்ம மரணமடைந்தார். அண்மையில் தில்லி வன்முறையை கண்டித்த முரளிதர் நள்ளிரவில் இடமாற்றம் செய்யப்பட்டார். இவையெல்லாம் நீதித்துறையில் பாஜக தலையீடு உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதற்கு காரணமாக அமைந்தசம்பவங்களாகும்.

;