விழுப்புரம்.பிப்.12- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் உள்ள ஐ.டி.ஐ. விடுதியில் அதிய மான் என்பவர் காப்பாளராக பணியாற்றி னார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிட நல மாணவர் விடுதி ஒன்றில் காப்பாளர் பணிக்கு இடமாறுதல் பெற விரும்பினார். இதற்காக அப்போது விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக இருந்த வந்தவாசியை சேர்ந்த துணை வேந்தன் (54) என்பவரை அணுகினார். அதற்கு அவர் ரூ.1 லட்சத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என்று அதியமான் கூறவே அப்படியானால் ரூ.50 ஆயிரம் கொடுக்கும்படியும், பணம் கொடுத்தால் மட்டுமே இடமாறுதல் அளிக்க முடியும் என்று துணைவேந்தன் கறாராக கூறி உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அதியமான், இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை எடுத்துக் கொண்டு விழுப்புரம் சுதாகர் நகரில் உள்ள துணை வேந்தன் வீட்டிற்கு சென்று அவரிடம் கொடுத்தார். அந்த பணத்தை துணை வேந்தன் வாங்கியபோது அவரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர் துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே துணைவேந்தன், பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது,இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலை யில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், குற்றம் சாட்டப்பட்ட துணை வேந்தனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.