tamilnadu

15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் விருதுநகரில் பொது மக்கள் அவதி

விருதுநகர், மே 14- விருதுநகர் நகராட்சிப் பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், பொது மக்கள் கடும் அவ திக்குள்ளாகி வருகின்றனர்.  விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு 21 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. அதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. இவர்களுக்கு நாள்தோறும் 54 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அதாவது, தாமிரபரணி கூட்டு குடிநீர்த் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 23 லட்சம் லிட்டரும், ஆணைக்குட்டம் பகுதியிலிருந்து 25 முதல் 30 லட்சம் லிட்டர் தண்ணீரும் வழங்கப்பட்டு வந்தது.  

கோடைகாலத்தில் மட்டுமே தண்ணீர் எடுக்கப்படும் ஒண்டிப்புலி கல்குவாரியில் சுமார் 30 அடி ஆழத்திற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. அதே நேரத்தில், ஆணைக்குட்டம் நீர்த் தேக்கம் முற்றிலும் வறண்டு போனது. இதனால், அங்குள்ள 13 திறந்த வெளி கிணறுகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே தினசரி எடுக்கப்படுகிறது. மேலும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சராசரியாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைப்பதே அரிதாக உள்ளது. கடந்த சில தினங்களாக உடைப்பு காரணமாக தாமிரபரணி குடிநீர் விருதுநகருக்கு வரவில்லை. இதனால், நகரின் 90 பிரிவுகளாக வாரம் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறையாக மாறியுள்ளது.  இதனால் பொது மக்கள், தனியார் லாரிகளில் குடிநீரை குடம் ஒன்றுக்கு ரூ.13 கொடுத்து வாங்கி பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், பல வீடுகளில் புழக்கத்திற்கான தண்ணீரை டிராக்டர் ஒன்றுக்கு ரூ.600 முதல் 1000 வரை விலையாக கொடுத்து வாங்கி வருகின்றனர்.  தற்போது பொது முடக்கத்தால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருப்பதாலும், சுகாதாரத்துறையினர், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்யவும் அறிவித்திருப்பதாலும், பொதுவாக தண்ணீரின் தேவை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.  அதேநேரத்தில், சாதாரண ஏழை எளிய மக்கள், குடிநீரைத் தேடி, காலிக் குடங்களுடன் தெருத் தெருவாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் குடங்களை கட்டிக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் குடிநீருக்காக சென்று வரும் நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

 தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கூடுதலான குடிநீர் விருது நகர் நகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்பட்டால் மட்டுமே குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முடியும். எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.கண்ணன், விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.