tamilnadu

வாக்குப் பதிவுக்கு ஏற்பாடுகள் அனைத்தும் தயார்: விழுப்புரம் ஆட்சியர்

விழுப்புரம்.ஏப்.17- விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப் பதிவு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் 3,227 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. வாக்கு பதிவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 264 வாக்குசாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன. 1497 வாக்கு மையத்தில் வெப்கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகின்றன.மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையத்தில் 15,563 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீல்சேர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர் 8 படை வர வைக்கப்பட்டுள்ளன. வாக்கு பதிவு நடைபெறும் மையத்தில் வாக்கு இயந்திரம் பழுதானல் உடனடியாக மாற்று இயந்திரம் பயன்படுத்துவதற்காக ஒவ்வொரு சட்டமன்ற வாரியாக 25 விழுக்காடு மின்னணு இயந்திரங்கள் கூடுதலாக வைத்துள்ளோம். அந்த மையங்கள் அனைத்தும் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கண்ட்ரோல் பிரிவு அலுவலகம் மூலம் கண்காணிக்கப்பட்டும். வெய்யின் தாக்கம் அதிகம் உள்ளதால் ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் தங்கும் அறை உள்ளது. பத்து பத்து பேராக அமர்ந்து சென்று வாக்கு அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 22 ஒன்றிய அளவில் ஒன்றியத்திற்கு 4 நடமாடும் மொபைல் டீம் என 48 டீம் காலை வாக்கு பதிவு தொடங்கியது முதல் முடியும் வரை சுற்றிக் கொண்டே இருக்கும். ஓஆர்எஸ் பவுடர் அனைத்து வாக்கு சாவடிகளிலும் வைக்கபட்டு மயக்கம் ஏற்பட்டால் கொடுக்கப்படும்,161 விதி மீறல்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப் பதிவு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.