விழுப்புரம்:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா நோய் தடுப்புபணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அதன்படி வருகிற 4-ந்தேதி (வெள்ளிக் கிழமை) விழுப்புரத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் கொரோனா நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்கிறார். அதனை தொடர்ந்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அவர் புதிய திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.முதலமைச்சர் வருகையையொட்டி விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவுப் பகுதி, கலெக்டர் அலுவலக நுழைவுப்பகுதி மற்றும் அலுவலகத்தின் உள்பகுதியில் வர்ணம் பூசப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதனிடையே முதலமைச்சர் வருகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடம் குறித்து தேர்வு செய் யப்பட்டது.
மேலும் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் அறைகள் உள்ளிட்டவைகளை அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையிட்டு அங்கு நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார். விரைந்து முடிக்க வேண்டும் அதனைத் தொடர்ந்து வளர்ச்சி திட்டப்பணிகளின் பட்டியல்கள், கொரோனா நோய் தடுப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரங்களையும் புள்ளிவிவரங்களுடன் அதிகாரிகளிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டறிந்ததோடு முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடித்து தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.