விழுப்புரம், மே 15-கோக்-பெப்சி உள்ளிட்ட அந்நிய குளிர்பானங்களை வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் கடைகளில் விற்கமாட்டோம் என வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் த.வெள்ளையன் தலைமையில் விழுப்புரத்தில் நடந்தது. மே 5 ஆம் தேதி தூத்துக்குடியில் வணிகர் தின மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய மாநில-மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் தெரிவித்து கவுரவிக்கப்பட்டனர். வணிகர் சங்க பேரவைக்கு சி.எல். செல்வம் மாநில பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக் கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த த.வெள்ளையன், “மக்களவைத் தேர்தலில் வாக்களித்து நாட்டின் பெருமையை காப்பாற்றியிருக்கிற நாம் நம்முடைய வாழ்வாதாரத்தை, நமது தொழில் உரிமைகளையும் மத்தியில் அமையும் புதிய அரசு காப் பாற்ற வேண்டும்” என்றார்.நாட்டில் வங்கிகள், தொழிற் சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற அனைத்தையும் வெளிநாட்டு கம்பெனிகள் நடத்த பாஜக அரசாங்கம் அனுமதி அளித்து வருகிறது. நமது நாட்டின் சுய தொழில்களை எப்படியெல்லாம் அழிக்க முடியுமோ அப்படியெல்லாம் அரசாங்கம் அழித்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார். விழுப்புரம், கடலூர் மாவட் டம் உட்பட தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட வணிகர்களின் ஜிஎஸ்டி அங்கீகாரத்தை மாநில அரசு ரத்து செய்திருக்கிறது. அரசின் இந்த செயல் வணிகர்களை முற்றிலும் நசுக்குவதாக அமைந்திருக்கிறது என்றும் அவர் கடுமையாக சாடினார்.தமிழ்நாட்டில் முற்றிலும் சில் லறை வணிகத்தை ஒழிக்க முடியவில்லை என்பதால் தற்போது ஆன்லைனில் வர்த்தகத்தை தொடங்க அனுமதியை அரசு வழங்கியுள்ளது. பொருட்களை வாங்க மக்கள் வணிகர்களிடம் வராததால் எப்படி வணிகர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப் படும். இதே நிலை நீடித்தால் வெளி நாட்டு கம்பெனிகளால் முற்றிலும் தமிழ் நாட்டில் வணிகர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.தமிழ்நாட்டில் மீண்டும் சுதேசிய கொள்கையை நடைமுறைப் படுத்த வேண்டும். அப்போதுதான் வணிகர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும். அந்நிய தயாரிப்பு பொருட் களை தவிர்த்து நம் நாட்டு தயாரிப்பு பொருட்களைத் தான் வாங்க வேண்டும் என்ற ஒரு சுதேசி கொள்கையை கடைபிடிக்க வேண்டும். வருகிற ஆகஸ்ட் முதல் வாரத்தில் ‘‘சுதேசி பொருட்களைத்தான் வாங்க வேண்டும்’’ என்ற இருசக்கர வாகனத்தில் வணிகர்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணம் தொடங்கி திருச்சி மலைக் கோட்டைக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வந்தடைகிறது.அங்கு ‘சுதேசி பிரகடனம்’ செய்ய இருக்கிறோம். அன்னிய குளிர்பானங்களான கோக்-பெப்சியையும் அதன் இதர தயாரிப்புகளையும் கடைகளில் விற் காமல் புறக்கணிக்க வேண்டும்.நம் நாட்டு தயாரிப்பு சுதேசி பொருட்களைத் தான் கடைகளில் விற்க வேண்டும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து சில்லரை வியாபாரிகளும் வணிகர் சங்க பேரவையின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக இதனை செயல்படுத்த முன்வர வேண்டும் என்றும் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்தார்.