tamilnadu

img

சிபிஎம் பிரதிநிதிகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற சிபிஎம் பிரதிநிதிகள் மாநாட்டில், கோயில், மடம், அறக்கட்டளை, வக்ஃபோர்டு இடங்களில் பல தலைமுறைகளாக குடியிருப்பவர்களின் குடியுரிமையை உறுதிப்படுத்திடவும், விவசாய நிலங்களில் சாகுபடி செய்து வரும் குத்தகை விவசாயிகள், இனாம் நில விவசாயிகள் நில உரிமையை பாதுகாத்திட மாநில அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதிநிதிகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 44627 கோவில்களுக்கு சொந்தமான 4.78 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் 1.26 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பல தலைமுறைகளாக குத்தகை விவசாயிகளாகவும், குடியிருப்புக்கான
அடிமனைகளில் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளின் குடும்பங்கள் வீடு கட்டி அடிமனை வாடகைதாரர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். கோவில்களுக்கு சொந்தமான கோவில்களை
சுற்றியுள்ள 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களில் குறு,சிறு வணிகர்கள் கட்டிட வாடகையாளர்களாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதேபோன்று இஸ்லாமியர்களுக்கான வக்ஃபு போர்டு கட்டுப்பாட்டில் உள்ள இடங்களிலும் பல்லாயிரக்கணக்கான பயனாளிகள் உள்ளனர். மேற்கண்ட 3 பிரிவினர்களில் 90 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க பிரிவினை சார்ந்தவர்களே. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவில் நிர்வாகமும் பயனாளிகளும் இணைந்து தீர்மானித்து கொண்ட அளவிலேயே விவசாயிகளுக்கு குத்தகைத்தொகை தானியமாகவும், பகுதி தொகையாகவும், அடிமனை பயனாளிகளுக்கும், கட்டட பயனாளிகளுக்கும் மாத வாடகையாகவும் தீர்மானிக்கப்பட்டு பயனாளிகளால் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின்
அரசாணை 353 இன் படி நியாய வாடகை நிர்ணயம் என்ற பெயரில் வாடகை நிர்ணய குழுவால் தீர்மானிக்கப்பட்ட அடிமனை வாடகையும், கட்டிட வாடகையும் பல நூறு மடங்கு உயர்த்தியும்,
உயர்த்தப்பட்ட வாடகையின் அடிப்படையில் 1998 ஆம் ஆண்டு முதல் நிலுவைத் தொகையாக பல லட்சங்கள் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து அடிமனை
பயனாளிகளும் கட்டிட பயனாளிகளும் மேற்கொண்ட அமைப்பு ரீதியான பல்வேறு தொடர் போராட்ட நடவடிக்கைகளின் விளைவாக தமிழ்நாடு அரசு 2007 ஆம் ஆண்டு அரசாணை 456 யும்,
2010 ஆம் ஆண்டு அரசாணை 298 யும் வெளியிட்டது.
இந்த அரசாணைகள் அடிப்படையில் மாத வாடகை தொகை மறுசீரமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு அறிவிக்க செய்து வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மீண்டும் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் 2016 ஆம் ஆண்டு முதல் அறநிலையத்துறை சட்டப் பிரிவு 34ஏ, அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கின்றோம் என்ற பெயரில் பல மடங்கு வாடகை உயர்த்தப்பட்டு, நிலுவைத் தொகையாக பல லட்சங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள பயனாளிகளுக்கு 2016 ஆம் ஆண்டு வரை மாத வாடகையாக ரூபாய் 4000 செலுத்திய பயனாளி, 2016 ஆண்டு முதல் மாதவடையாக ரூபாய் 40000 செலுத்த வேண்டும் என்றும், நிலுவைத் தொகையாக 6 லட்சங்கள் முதல் 60 லட்சங்களுக்கு
மேல் செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்த தவறினால் அவர்கள் வெளியேற்றப்பட்டு அறநிலையத்துறை சட்டத் பிரிவு 78 மற்றும் 79 படி சீல் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் கோவில்களுக்கும், மடங்களுக்கும் சொந்தமான விவசாய நிலங்களில் பல தலைமுறைகளாக குத்தகை விவசாயம் செய்து வரும் பயனாளிகளுக்கு எந்த அரசாணையின் வழிகாட்டுதலும் இன்றி மேலெழுந்த வாரியாக குத்தகை தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு வருகின்றது. குத்தகைத் தொகையை மறுப்பவர்களுக்கு மறு ஏலம் என்ற பெயரில் குத்தகை மாற்றம் செய்வதற்கும், நிலத்தை விட்டு வெளியேற்றுகின்ற நடவடிக்கையும் சட்டப்பிரிவு 78ன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சாகுபடியில் ஈடுபட்டு வரும் குறு-சிறு விவசாய மக்களின் வாழ்வாதாரத்தையே இந்த நடவடிக்கைகள் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. அது மட்டுமன்றி கோவில்களை சுற்றி உள்ள கோவில்கள் சொந்தமான கட்டிடங்களில் வணிகம் செய்து வரும் குறு சிறு வணிகர்களுக்கும் புதிய வாடகை நிர்ணயம் என்ற பெயரில் பல மடங்கு வாடகை
உயர்த்தப்பட்டு அவர்களும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே மாநில அரசு கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட இம்மாநாடு கோருகிறது.
1. பல தலைமுறைகளாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு, வக்ஃப் போர்டுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புக்கான அடிமனைகளை பயன்படுத்தி வரும் பயனாளிகளில் பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்களுக்கு
சாத்தியமான விலையிலும், பொருளாதார ரீதியில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாகவும் அறநிலையை துறை சட்டம் 34 இன் படி கிரையப்பட்டா வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்.
2. கிரைய பட்டா நடைமுறைக்கு வரும் காலம் வரை புதிய வாடகை நிர்ணய குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் 2016 க்கு பின்பான வாடகை உயர்வு மற்றும் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு மறு சீரமைக்கப்பட வேண்டும். இந்து அறநிலையத்துறை, அடிமனை பயனாளிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்வது என்பது “சந்தையில் நிலவும் நிலத்தின் விற்பனை மதிப்பு” என்ற அடிப்படையில் இல்லாமல் அறநிலையத்துறை சட்டம் 34 ஏ - படி சந்தையில் நிலவும் நிலத்திற்கான வாடகை மதிப்பு என்ற அடிப்படையில் வாடகையை தீர்மானிக்க வேண்டும்.
3. விவசாய நிலங்களில் பல தலைமுறைகளாக சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் சிறு, குறு விவசாயிகளை மறு ஏலம் என்ற பெயரில் வெளியேற்றாமல், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் குத்தகைத் தொகை நிர்ணயித்து வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. கோவில்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் வணிகம் செய்து வரும் பயனாளிகளுக்கு மேலெழுந்த வாரியாக வாடகை நிர்ணயிக்காமல் குறு சிறு நடுத்தர பிரிவுகளாக வகைப்படுத்தி வாடகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
5. தன்னிச்சையாக உயர்த்தப்பட்ட வாடகை மற்றும் குத்தகையை செலுத்தாத பயனாளிகள் மீது அறநிலையத்துறை சட்டம் 78, 79 முதலானவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
6. கோயில் இடங்களில் தொடர்ந்து ஐந்தாண்டு காலம் குடியிருப்பவர்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை 318ஐ செயல்படுத்திட மாநில அரசு
உடன் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
7. மாநிலம் முழுவதும், பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இனாம் ஒழிப்பு சட்டப்படி பட்டா வழங்கப்பட்ட நிலங்களை தற்போது பட்டாவை ரத்து செய்து அறநிலையத்துறை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை கைவிட வேண்டும்.
8. வக்ஃபோர்டு இடங்களில் உள்ள அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகளை வெளியேற்றிட மேற்கொள்ளப்படும், நடவடிக்கைகளை கைவிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.