tamilnadu

குடிநீர் கேட்டு குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

வேலூர், மே 15- வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட் பட்ட வேட்டப்பட்டு ஊராட்சி, சொக்கலாம்பட்டி சாமுண்டீஸ் வரி குறுவட்டம், கோமுட்டி குறுவட்டம், வைத்தியக்காரன் குறுவட்டம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு ஊராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. சீரான குடிநீர் கிடைக்க ஊராட்சி அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பத்தூர்-நாட்டறம்பள்ளி சாலையில், சொக்கலாம்பட்டி மாரியம்மன் கோயில் அருகே காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் சாந்தலிங்கம் மற்றும் காவல்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தினமும் டிராக்டர் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், ஒரு வாரத்தில் சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.