ராணிப்பேட்டை நகரில் கடந்த 1999ஆம் ஆண்டு உழவர் சந்தை திறக்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதை மூட திட்டமிடப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கிராமப்புற விவசாயிகளின் விளைநிலத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள், தேங்காய், வாழை இலை, பூக்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான விளைப் பொருட்களுக்கும் கட்டுப்படியான விலை பெறவும், இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளை தங்கள் விளைப் பொருட்களை விற்பனை செய்து கொள்வதற்கு ஏதுவாக உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது. ராணிப்பேட்டை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாய விளை பொருட்களை ஆர்வத்துடன் கொண்டு வந்து விற்பனை செய்து லாபமடைகின்றனர். அதேபோல, ராணிப்பேட்டை நகர மக்கள் மட்டுமின்றி சிப்காட் சுற்றியுள்ள பொதுமக்களும் பயனடைந்து வருகின்றனர். உழவர் சந்தை தொடங்கும் அதிகாலை நேரத்தில் விவசாய கிராமங்களில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் உழவர் சந்தைகளுக்கு விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களுக்கு பேருந்துகளில் சுமைக் கட்டணம் இல்லாமல், உழவர் சந்தையில் விற்பனை மேற்கொள்ள விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. இதனால் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு நியாயமான விலையும், நகர்ப்புற நூகர்வோர்களுக்கு இயற்கையான சத்தான காய்கறி, பழங்கள் குறைந்த விலையில் கிடைத்தன. விவசாயிகள் சங்க தாலுக்கா செயலாளர் என்.ரமேஷ் கூறுகையில், தமிழக விவசாயிகள் நலனுக்காக 1999ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று, கொண்டுவரப்பட்ட திட்டம்தான் உழவர் சந்தை திட்டம். பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக காழ்ப்புணர்ச்சியால் உழவர் சந்தைகளை தமிழகம் முழுவதும் ஒரே நாளில் மூடிவிட்டது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் திறக்கப்பட்டது. உழவர் சந்தை வாரம் முழுவதும் மக்களின் பெரும் ஆதரவோடு சிறந்த முறையில் செயல்படுகிறது. இதை மூட அதிகாரிகள் திட்டமிடுகிறார்கள். நகரில் உள்ள சில பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக அரசு நிர்வாகம் வளைந்து விடக் கூடாது என்றார். இதுகுறித்து மாவட்ட வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் நரசிம்மா கூறுகையில், வேலூர் மாவட்டம் முழுவதும் இயங்கிவரும் 9 உழவர் சந்தைகள் மூலம் நாளொன்றுக்கு 160 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனையாகின்றன. இதன் மூலம் 700 விவசாயிகள், 35 ஆயிரம் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். ராணிப்பேட்டை உழவர் சந்தையில் மட்டும் நாளென்றுக்கு சுமார் 11 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனையாகின்றன. இதன் மூலம் 65 விவசாயிகளும், 3 ஆயிரம் வாடிக்கையாளர்களும் பயனடைகின்றனர். இந்த உழவர் சந்தை விரைவில் மேம்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் இயங்கிவரும் உழவர் சந்தைகளை மேம்படுத்துவதற்காக முதன்முறையாக ரூ. 57 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை உழவர் சந்தை உள்பட மாவட்டத்தில் இயங்கிவரும் 9 உழவர் சந்தைகள் மேம்படுத்தப்பட உள்ளன என்றார். கே.ஹென்றி