திருச்சிராப்பள்ளி, மார்ச் 18 - காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்த கர்நாடக மாநில பாஜக அரசை கண்டித்தும், கர்நாடக அரசுக்கு துணை போகாமல் சட்ட விரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் தொட்டியம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிதம்பரம், பொறுப்பாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய தலைவர் முருகானந்தம், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வரதராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆவுடையார்கோவில்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் கலந்தர் தலைமை வகித்தார். தாலுகா தலைவர் அழகர், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சி.சுப்ரமணியன், சிபிஎம் தாலுகா செயலாளர் நெருப்பு.முருகேஷ், கூத்தபெருமான் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
பாபநாசம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பாபநாசம் ஒன்றியச் செயலாளர் முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் காதர் ஹீசைன் உள்பட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலத்தில் விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் வி.பூசாந்திரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பி.கந்தசாமி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் டி.ஜான் கென்னடி, மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சுமதி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் டி.அண்ணாதுரை, ஒன்றியக் குழு உறுப்பினர் பி.காளியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம் தலைமை வகித்தார். சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, திருவோணம் ஒன்றியச் செயலாளர் பெரியசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் மதுக்கூர் வேதாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி
மன்னார்குடி பந்தலடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் ஜி.மாரிமுத்து தலைமை வகித்தார். சிபிஎம் நகர செயலாளர் ஜி.தாயுமானவன், மூத்த தோழர் கே.டி. கந்தசாமி, சிஐடியு இணைப்பு சங்க நிர்வாகிகள் டி.ஜெகதீசன், இரா.யேசுதாஸ், ஏ.பி.தனுஷ்கோடி, ஏ.பி.டி லோகநாயகி, எஸ்.ஏகாம்பரம், தியாக சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.