districts

img

கரூரில் 54 புதிய சாலை விரிவாக்கப் பணிகள்: முதல்வர் ரூ.160 கோடி நிதி ஒதுக்கீடு

கரூர், மே 22- கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள் மறுசீரமைப்பு செய்வதற்கு 54 புதிய திட்டப்பணிகள் 160 கோடி மதிப்பீட்டில் துவங்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 54 புதிய சாலை விரிவாக்கப் பணிகள் 160 கோடி மதிப்பில் தமிழக முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் இரண்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் போதிய நிலக்கரி இருப்பு ஐந்து நாட்கள் உள்ளது என தான் தெரிவித்த பிறகும் அந்த செய்தியை கருத்து தெரிவிப்பவர்கள் தெரிந்து கொள்ளாமல் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கின்றனர். அரவக்குறிச்சியில் கலை அறிவியல் கல்லூரி துவங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கரூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்காக 200 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் அமைப்பதற்கான நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கரூர் பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சியில் 63 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என தெரிவித்தார்.