வேலூர், அக்.12- வட்டார அளவில் வேளாண் எந்திரங்கள், கருவிகளின் வாடகை மையங்கள் அமைத்திட மானிய அடிப்படையில் நிதியுதவி அளிக்கப்பட உள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- வேளாண் பணியாளர்கள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மாநில அரசு வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதிக விலையுள்ள வேளாண் எந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வட்டார அளவில் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க நிதியுதவி செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் ஒரு வாடகை மையம் அமைத்திட 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்த மையம் வட்டார அளவில் அமைக்கப்படுவதால் விவசாயப் பணிகளுக்கு தேவையான பல்வேறு வேளாண் எந்திரங்கள், கருவிகள், சிறு வேளாண் உபகரணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த வாடகையில் கிடைக்கப் பெறும். வேலூர் மாவட்டத்தில் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் வகையில் 15 மையங்களை அமைத்திட ரூ.1.50 கோடி மானியத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த மானியத் தொகையில் பொதுப்பிரிவினருக்கு ரூ.5 லட்சமும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ரூ.3லட்சமும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளிகளின் மானிய இருப்பு நிதிக்கணக்கில் 4 ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதித்தொகை பயனாளிகளின் சேமிப்புக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 4 ஆண்டுகளுக்குப் பிறகு பயனாளிக்கு மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் எந்திரங்கள், கருவிகளை சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் சரிபார்த்த பிறகு மானிய இருப்புத் தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் திரும்ப வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உடனடியாக அந்தந்த வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு வேலூர் மாவட்டச் செயற்பொறியாளர் - 94431 16543, உதவி செயற்பொறியாளர்கள் 79049 19886 (வேலூர்), 94445 23030 (வாலாஜா), 63800 33211 (திருப்பத்தூர்) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.