tamilnadu

மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்ந்திடப் பங்களிக்க சிவப்பு வாழ்த்துகள்!

“எளிமையான வாழ்க்கை பற்றி அடிக்கடி பேசுகிறோம். ஆனால் மக்கள் உழைப்பதும் பொருளீட்டுவதும் போராடுவதும் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திக்கொள்ளத்தானே? அறிவியலும் கண்டுபிடிப்புகளும் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கி, கடினமான நிலைமைகளைச் சுருக்குவதற்காகத்தானே? அது இயல்பான நியாயமான ஆசையல்லவா? அப்படியிருக்க, வசதிகளுக்கு ஆசைப்படாத துறவுத்தனமான எளிய வாழ்க்கை பற்றி அறிவுறுத்துவது சரியா? அது மார்க்சியமாகுமா? போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழியை நான் ஏற்பதில்லை…”
“நல்ல கேள்வி (சிறிது நேரம் சிந்தனை). உண்மைதான். நடைமுறை வாழ்க்கையை இலகுவாக்கிக்கொள்ள வேண்டும், வசதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தையும் அதற்காக உழைப்பதையும் கம்யூனிஸ்ட்டுகள் குறைத்து மதிப்பிட முடியாது. கற்பனையான, நடைமுறை சாத்தியமற்ற துறவு என்பதில் நானும் உடன்படவில்லை. நாம் எளிமையான வாழ்க்கை எனக் கூறுவது பொதுமக்களுக்காக அல்ல. இயக்கத்தோடு இணைந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து சமுதாயத்திற்காக உழைக்கிற சக தோழர்களுக்காகத்தான். அவர்களுக்கும் வசதிகள் தேவை, ஆனால் அவற்றைத் தேடுவதில் மக்களிடமிருந்து விலகிவிடக்கூடாது. அனைத்து வசதிகளும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே நம் போராட்டம். இந்தக் கேள்விக்காக நன்றி தோழர்.”
கேள்வி கேட்டது நான். பதில் கூறியவர் எம்.ஏ. பேபி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நடத்தும் அனைத்து மொழிப் பத்திரிகைகளின் ஆசிரியர் குழு தோழர்களுக்காகத் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு பயிலரங்கத்தில் அவர் உரையாற்றினார். அவர் கூறிய ஒரு கருத்து தொடர்பாக நான் இதைக் கேட்க இப்படியோர் அருமையான விளக்கம் அவரிடமிருந்து எல்லோருக்கும் கிடைத்தது.
மாணவப் பருவத்திலேயே உள்ளூர் மக்களுக்கான போராட்டங்களில் இறங்கி, இந்திய மாணவர் சங்கம்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எனச் செயல்பட்டு, கட்சியின் மையக்குழு, அரசியல் தலைமைக்குழு என்று பங்களித்து, கேரள சட்டப்பேரவை உறுப்பினராக, அமைச்சராக, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக எனப் பணியாற்றி நாடு முழுவதும் சுற்றிவந்திருக்கும் தோழர் மரியம் அலெக்ஸாண்டர் பேபி இன்று கட்சியின்பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அரசியல் களம், பண்பாட்டுத்தளம் இரண்டிலும் ஈடுபாடும் மார்க்சியக் கண்ணோட்டமும் கொண்ட விரிவான வாசிப்பாளர்.
அவருக்கும், புதிய மையக் குழு, அரசியல் தலைமைக்குழு தோழர்களுக்கும் - இயக்கம் சவால்களை எதிர்கொண்டு, போதாமைகள் களைந்து, புதிய வெற்றித் தடங்கள் பதித்து மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்ந்திடப் பங்களிக்க சிவப்பு வாழ்த்துகள்.
- அ. குமரேசன்