இளம் பட்டுப்புழுக்கள் தொடர் இறப்பு ஈரோடு விவசாயிகள் கவலை
ஈரோடு மாவட்டத்தில் இளம் பட்டுப்புழுக்கள் தொடர்ச்சி யாக இறந்து வருவதால், பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவ சாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சுமார் 1800 விவசாயிகள் 4500 ஏக்கரில் மல்பெரி தோட்டம் அமைத்து பட்டுக்கூடு உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 1 மற்றும் மார்ச் 21 ஆகிய தேதிகளில் வந்த இளம் புழுக்கள் நான்காம் பருவத்துக்கு முன்பும் பின்பும் திடீரென இறந்துவிட்டன. குறிப்பாக பிகேடி-72, எம்ஒய்எஸ்-72, எச்எஸ்ஆர்-4 ஆகிய ரகங்களைச் சேர்ந்த அனைத்து புழுக்களும் இறந்து போனது விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் இளம்புழு வளர்ப்பு மையத்தை அணுகியபோது, புழுக்கள் ஆரோக்கியமாக இருந்ததாகவும், முட்டையின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர், களப்பணி அலுவலர் மற்றும் கோபிசெட்டிபாளையத் திலுள்ள மத்திய பட்டு வாரிய விஞ்ஞானியை விவசாயி கள் சந்தித்தனர். அவர்கள் பட்டு வளர்ப்பு மனையை பார்வை யிட்டு, ஜாக்கியில் ஏற்பட்ட அழுத்தமே இறப்புக்கு காரணம் என தெரிவித்தனர். இதனால் ஜாக்கி வளர்ப்பவர்கள் கூறுவது உண்மையா அல்லது பட்டு வளர்ச்சி அதிகாரிகள் கூறுவது உண்மையா என்று தெரியாமல் விவசாயிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தொடர்ச்சியாக பட்டுப்புழுக்கள் இறந்து வருவதால் விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒன்றிய மற்றும் மாநில பட்டு வாரியங் கள் இணைந்து விவசாயிகளுக்கு தரமான இளம் புழுக்கள் கிடைப்பதற்கும், நஷ்டம் ஏற்பட்டால் உடனடியாக நிவா ரணம் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று விவசாயிகள் மற்றும் பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கத்தினர் கோபிசெட்டிபாளையத் திலுள்ள மத்திய பட்டு வாரிய விஞ்ஞானியிடம் முறை யிட்டுள்ளனர்.
போதை இளைஞரால் மலை ரயில் சேவை பாதிப்பு
உதகையிலிருந்து குன்னூரை நோக்கி பய ணித்த மலை ரயிலின் தண் டவாளத்தில் மது போதை யில் ஒரு இளைஞர் கிடந்த சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தின் உதகை - குன்னூர் - மேட்டுப் பாளையம் இடையே நாள்தோறும் இயங்கும் மலை ரயில், திங்களன்று வழக்கம்போல் உதகை ரயில் நிலையத்தி லிருந்து புறப்பட்டு, வெலிங்டன் அருகே சென்றுகொண்டி ருந்தது. அந்த நேரத்தில், தண்டவாளத்தில் ஒருவர் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுநர், உடனடியாக ரயிலை நிறுத்தினார். பின்னர், ரயில் ஊழியர்கள் அதிவேகமாக செயல்பட்டு, தண்டவாளத்தில் மது போதையில் இருந்த இளைஞரை அப்புறப்படுத்தினர். இந்த திடீர் சம்பவம் காரணமாக மலை ரயில் போக்குவரத்து சில நிமிடங்கள் தடைப்பட்டது. சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட இளைஞர் மீது ரயில் ஊழியர் கள், குன்னூர் ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்த னர்.
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்'
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஈரோட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், 2009-க்குப் பிறகு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும், அண்ணாவால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும், மேலும் 1.4.2026 அன்று வழங்கப்படவுள்ள சரண் விடுப்பை முன்தேதியிட்டு 2025-லிருந்தே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். ஈரோட்டில் உள்ள யுஆர்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் பிவிபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த விடைத்தாள் திருத்தும் மையங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யுஆர்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஹ.சுதகுமார் தலைமை தாங்கினார். பிவிபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீவித்யா மற்றும் மாவட்டச் செயலாளர் ஆ.இளங்கோவன் ஆகியோர் தலைமை ஏற்றனர்.