tamilnadu

விபத்தில் இறந்த உதவிப் பேராசிரியை குடும்பத்திற்கு ரூ. 36 லட்சம் இழப்பீடு

 வேலூர், ஜூலை 18- ஆம்பூர் அருகே சாலை விபத்தில் இறந்த உதவிப் பேராசிரியையின்  குடும்பத்திற்கு ரூ. 36 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ராணிப்பேட்டை மக்கள் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவர், தமிழ்நாடு காவல் துறையில் காவலராக சென்னையில் பணி புரிந்து வந்தார். இவரது மனைவி கௌதமி (27). இவர் தருமபுரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சிவமூர்த்திக்கு பணிமாறுதல் ஆணை உத்தரவு வந்த தையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி தனது மனைவி கெளதமியுடன் வீட்டை காலி செய்துவிட்டு மினி வேனில் பொருட்களை ஏற்றிக் கொண்டு வேலூர் வழியாக தருமபுரி நோக்கிச் சென்றனர். ஆம்பூர் அருகே சென்றபோது சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மினி வேன் மோதியதில் கௌதமி உயிரிழந்தார்.  சிவமூர்த்தி இழப்பீடு கேட்டு ராணிப்பேட்டை 2ஆவது கூடுதல் மாவட்ட  அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராணிப்பேட்டை நீதிமன்ற  வளாகத்தில் புதனன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சமரசத் தீர்வு காணப்பட்டது. அதன்படி சிவமூர்த்தி குடும்பத்துக்கு ரூ. 36 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து அதற்கான உத்தரவை ராணிப்பேட்டை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அ.முகமது ஜியாபுதீன் வழங்கினார். அதேபோல் சாலை விபத்தில் காயமடைந்த காரை பகுதியைச்  சேர்ந்த முத்துவுக்கு (59) இழப்பீடாக ரூ. 25 ஆயிரம் வழங்க உத்தரவிடப்  பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பூபாலன், வழக்குரைஞர்கள், வட்ட  சட்டப் பணிகள் குழு உதவியாளர் கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.