tamilnadu

திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் முக்கிய செய்திகள்

திருச்சி அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சையை உறுதிப்படுத்த கோரிக்கை திருச்சிராப்பள்ளி, மே,11-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் லெனின், திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் அளித்த மனுவில், திருச்சி அரசு மருத்துவமனைக்கு தினம் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பணியிடங்களை நிரப்பி தரமான சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். நோயாளிகளுக்கு குடிநீர், சுடுதண்ணீர், சுத்தமான கழிவறைகள் மற்றும் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய ஒரு இடத்திற்கும், பணம் செலுத்த கருவூலத்திற்கு என அலைக்கழிப்பதை தவிர்த்து ஒரே இடத்தில் பெறும் வகையில் ஆவண செய்ய வேண்டும்.மருத்துவமனையின் புதிய கட்டிடங்களில் பராமரிப்பு இல்லாததால் கழிவுநீர் வெளிபுறத்தில் ஓடுகிறது. பல இடங்களில் தரைகள் பெயர்ந்துள்ளன. இதனை உடனடியாக சரி செய்து பராமரிக்க வேண்டும். இல்லையேல், இந்திய ஜனநாயக அமைப்பிற்கு அனுமதி வழங்கினால் பொதுமக்கள் உதவியோடு உழைப்பு தானம் செய்திட தயாராக உள்ளோம் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வாலிபர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பாரதி சீனிவாசன், மாவட்ட நிர்வாகிகள் இரட்டைமலை, ஷாஜகான், விக்கி, அகிதா, செந்தில், விஜயேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.


3 மாதமாக குடிநீர் இன்றி அவதி கிராம மக்கள் சாலை மறியல்

கரூர், மே 11-கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா முன்னையனூர் பகுதி காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த 3 மாதமாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் குடிநீருக்காக கடும் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. மேலும் தற்போது கோடையின் தாக்கம் அதிகம் உள்ளதால் தண்ணீரின் தேவையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை ஊர் மக்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் முனையனூர் பேருந்து நிறுத்தம் அருகில் காலிக் குடங்களுடன் பெண்கள் மற்றும் ஆண்கள் 200-க்கும் மேற்பட்டோர் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஊராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.