tamilnadu

img

வேளாங்கண்ணி விழா துவங்கியது

நாகப்பட்டினம், ஆக.30- புகழ்பெற்ற வேளாங்கண்ணித் தூய ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு விழா வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்குக் கொடியேற்றத்துடன் துவங்கியது. உலகின் ‘கீழை நாடுகளின் லூர்து’ என அழக்கப்படுவதும், தென் இந்தியாவில் மிகப் பழமையாக ‘பசலிகா’(பேராலயம்) எனச் சிறப்பு அந்தஸ்து பெற்றதுமானது நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணிப் பேராலயமாகும். வேளாங்கண்ணியில், ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பேராலயத்தின் பெருவிழாவானது, ஆகஸ்ட்-29 ல் துவங்கி, 10 நாள்கள் நடைபெறும். செப்டம்பர்-8ல் மாதா பிறந்த நாளாகிய அன்று, பேராலயத்தில் கொடி இறக்கத்துடன் பெருவிழா நிறைவுபெறும். வியாழக்கிழமாலை மாலை 5.30 மணிக்கு, அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி, திருத்தேரில் வைக்கப்பட்டு நகர்வலம் வந்தது. பின்னர், மாலை 6.30 மணிக்கு, தஞ்சை மறை மாவட்டப் பேராயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ் கொடியேற்றி வைத்தார். அப்போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து மரியே வாழ்க என முழக்கமிட்டனர். அலங்கார மின் விளக்குகள், வாண வேடிக்கை நிகழ்ச்சி காண்போரை கவர்ந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் பா.பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார், பேராலய அதிபர் எம்.ஏ.எம். பிரபாகர் அடிகளார், துணை அதிபர் எஸ்.ஏ.சூசைமாணிக்கம், பொருளாளர் பி.யாகப்பா ராஜரெத்தினம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  

செப்டம்பர்-7 அன்று முன்னிரவில் திருத்தேர்கள்(சப்பரங்கள்) பவனிக் காட்சி கீர்த்தி பெற்றதாகும். இந்தப் பேராலயத்தில் 10 நாள்களும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, கொங்கனி, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வழிபாடுகள், திருப்பலிகள், சிலுவைப் பாதைகள், மறையுரைகள் போன்றவை நடைபெறும். இரவு 9 மணியளவில் கலையரங்கில்  நற்செய்திக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மிக அதிகமாக கேரள மாநிலத்திலிருந்தும் மதம், சாதி, இனம், மொழி, நிறம் கடந்து பல்வேறு கலாச்சாரங்களுடைய மனிதர்கள் இங்கே ஒன்று கூடுவது மானுடத்தின் சங்கமமாகும்.