tamilnadu

img

சாதியைச் சொல்லி திட்டி தலித் தந்தை, மகன் மீது கொலை வெறித்தாக்குதல்

சாதி ஆதிக்க வெறியர்கள் பறையை கிழித்து அராஜகம் 

சீர்காழி, செப்.6- பறை அடிக்கும் தொழிலாளியான தந்தை, மகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி சாதியைச் சொல்லி திட்டி பறையை கிழித்த சாதி ஆதிக்க வெறியர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.     நாகை மாட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியம் ஆச்சாள்புரம் ஊராட்சி கீழஅகரம் கிராமத்தில் வசித்து வரும் ராமச்சந்திரன்(48), இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவர் பறை அடிக்கும் தொழிலாளி.  இந்நிலையில் கடந்த 3-ம் தேதி முதலமேடு ஊராட்சி நடுவக்காடு என்ற தெருவில் விநாயகர் ஊர்வலத்திற்கு தப்பு மேளம் அடிக்க ராமச்சந்திரனும் மற்றும் அவரது மகன் கோகுலகிருஷ்ணனும் சென்றனர். அப்போது அங்கு அதே ஊரைச் சேர்ந்த சங்கர்(30), திவாகரன்(33), அய்யாவு(31) உள்பட சிலர் சேர்ந்து ராமச்சந்திரன், மற்றும் மகன் கோகுலகிருஷ்ணன் ஆகிய இருவரை குறிப்பிட்ட நேரம் முடிந்தும் தொடர்ந்து அதிக நேரம் தப்பு அடிக்கச் சொல்லியும், நாங்கள் நிறுத்தச் சொல்லும் வரை அடிக்க வேண்டும் என்று சாதி பெயரை சொல்லியும், அப்பா, மகன் இருவரையும் கொலை வெறியோடு தாக்குதல் நடத்தி துன்புறுத்திய அவர்கள் பயன்படுத்திய தப்பை அடித்து கிழித்தனர். ராமச்சந்திரன் மகன் கோகுலகிருஷ்ணன் எம்.ஏ.,பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. இதையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகரம் கிளை செயலாளர் சண்முகம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சேர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்து விசாரித்தனர். மேலும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகை மாவட்ட தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான சி.வி.ஆர்.ஜீவானந்தம், த.தீ.ஒ.மு. மாவட்டக்குழு உறுப்பினர் சரவணன், சீர்காழி நகரச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் கோகுலகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் ஆறுதல் கூறியும், அருகாமையில் உள்ள நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்தும், பின்னர் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து சாதிப் பெயரை சொல்லியும், தகாத வார்த்தைகளால் பேசி அப்பா, மகன் இருவரையும் கொலை வெறியோடு தாக்குதல் நடத்தி துன்புறுத்தி, தப்பை கிழித்து சேதப்படுத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் காவல்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.