பெரம்பலூர், மே 17-குறைந்தழுத்த மின் விநியோகத்தைக் கண்டித்து பெரம்பலூர் கோட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று பொதுமக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம் ஆத்தூர் சாலை கோனேரிபாளையம் அருகிலுள்ள முத்து நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் தண்ணீர் இறைக்கும் மின் மோட்டார், வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வெள்ளியன்று பெரம்பலூர் கோட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை கைவிட்டனர். உடனடியாக மின்விநியோகத்தை சரி செய்யாவிட்டால் குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.