புதுக்கோட்டை, ஜூலை 10- கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மடிக்கணினி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்படாததைக் கண்டித்து புதன்கிழமை புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2017-18, 2018-19 ஆகிய இரண்டு கல்வி ஆண்டுகளாக அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டிய மடிக்கணினி மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான மாணவ, மாணவிகள் தங்களின் எதிர்காலக் கல்வி பாதிக்கப்படும் எனக் கூறி புதன்கிழமையன்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா, முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.கார்த்திகா, பசுபதி, அகத்தியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சந்தோஷ், கார்த்தி, ஜாய்ஸ் ராகவி, ராஜி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட முடிவில் தங்களுக்கும் மடிக்கணினி மற்றும் கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.