திருவனந்தபுரம்:
கேரளத்தின் சொந்த தயாரிப்பான ‘கொகோனிக்ஸ்’ மடிகணினிகள் அடுத்த சில நாட்களில் அமேசான் ஆன்லைன் சந்தை மூலம் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.29,000 முதல் ரூ.39,000 வரை விலையுள்ள 3 வகையான மடிக்கணினிகள் ‘கொகோனிக்ஸ்’ என்கிற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒரு மாநில அரசின் முயற்சியில் பொது- தனியார் பங்கேற்புடன் தயாரிக்கப்படும் முதலாவது மடிகணினி என்கிற பெருமையை கொகோனிக்ஸ் பெற்றுள்ளது. கேரள அரசின் பொதுத்துறை நிறுவனமான கெல்ட்ரான், பன்னாட்டு மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான யூஎஸ்டி குளோபல், இண்டல், கேஎஸ்ஐடிசி, ஸ்டார்ட் அப் ஆக்ஸிலரோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கொகோனிக்ஸ் மடிக்கணினி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளைவிட விலை குறைவு என்பது இதன் சிறப்பு. கெல்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் திருவனந்தபுரம் மண்விளையில் உள்ள பிரிண்டட் சர்க்கியூட் தொழிற்சாலை கொகோனிஸ் உற்பத்திக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 2 லட்சம் மடிக்கணினிகள் உற்பத்தி செய்ய கொகோனிக்ஸ் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, அரசு நிறுவனங்கள், பள்ளிக்கூடங்களுக்கு கொகோனிக்ஸ் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. பழைய மடிக்கணினிகளை திரும்பப் பெறும் மின் கழிவு மேலாண்மை முறையையும் கொகோனிக்ஸ் மேற்கொள்ளும்.