tamilnadu

img

சுயஉதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்யக் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூன்,23- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொன்மலை இடைக்கமிட்டி பேரவை வியாழனன்று பொன்மலை சங்கத்திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இடைக்கமிட்டி தலைவர் நாகலெட்சுமி தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் கீதா, மாவட்ட செயலாளர் சரஸ்வதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன் வாழ்த்துரை வழங்கினார்.  கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய தலைவராக திலகவதி, செயலாளராக புவனேஸ்வரி, பொருளாளராக ஜெயபிரதா, துணைத்தலைவராக ஜெயந்தி, துணை செயலாளராக நாகலெட்சுமி உள்பட15 பேர் கொண்ட இடைகமிட்டி தேர்வு செய்யப்பட்டது. செயலாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.  இதே போன்று மாதர் சங்கத்தின் ஜங்சன் இடைக்கமிட்டி பேரவை  கூட்டம் வெள்ளியன்று தென்னூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இடைகமிட்டி தலைவர் கஸ்தூரி தலைமை வகித்தார். மூத்த தோழர் வைரமணி, மாவட்ட செயலாளர் சரஸ்வதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் முதியோர், விதவை உதவித்தொகையை பாரபட்சமின்றி வழங்க வேண்டும். வங்கிகளில் இருந்து பெறப்பட்ட சுயஉதவிக் குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்டவை தீர்மானிக்கப்பட்டது.  புதிய தலைவராக கஸ்தூரி, செயலாளராக வள்ளி, பொருளாளராக சித்ரா, துணைத் தலைவர்களாக பிரேமலதா, ரஹமத்னிஷா, துணை செயலாளர்களாக சரளா, சந்திரா உள்பட 13 பேர் கொண்ட இடைக்கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.