பெரம்பலூர், ஜூன் 30- பெரம்பலூர் நகரில் தட்டுப்பாடின்றிக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் நகராட்சியில் 16-வது வார்டு மக்களுக்குக் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் 15 அல்லது 20 நாளுக்கு ஒரு முறையே விநியோகிக்கப்படுகிறது. இது கடந்த சில வாரமாகத் தடைபட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனர். தகவலறிந்த பெரம்பலூர் காவல்துறையினர், தடையின்றிக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்துப் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.