திருச்சிராப்பள்ளி, ஜூன் 5-திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே உள்ள பெருகமணி நடுத்தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி (27). இவர் உறையூரில் உள்ள ஒரு மருந்துகடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அய்ணா(25) இவர்களுக்கு திருமணமாகி 11 மாதங்கள் ஆகிறது.இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அய்ணாவிற்கு கடந்த 1-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையொட்டி அவரை பெருகமணி காவேரி கரையோரம் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜூன் 1-ம் தேதி இரவு அழைத்து சென்றனர்.அப்போது சுகாதார நிலையத்தில் நர்ஸ் பச்சைநாச்சி மற்றும் உதவியாளர் வேலை செய்யும் சந்திரா ஆகியோர் பணியில் இருந்தனர். அவர்கள் அய்ணாவிற்கு சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் ஜூன் 2-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அய்ணாவிற்கு பிரசவலி அதிகரித்தது. நர்ஸ் மற்றும் உதவியாளர் அய்ணாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது குழந்தையின் தலை பகுதி வெளியில் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தையின் உடல் பகுதி வெளியே வரததால் அய்ணா நீண்ட நேரம் சிரமப்பட்டுள்ளார். இதுகுறித்து செவிலியர் பச்சைநாச்சி மருத்துவருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு வந்த மருத்துவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அய்ணாவிற்கு பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்தில் அய்ணாவிற்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையறிந்த அய்ணாவின் கணவர் மற்றும் உறவினர்கள் பிரசவம் பார்த்த செவிலியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பணியில் இருந்த மருத்துவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. பெருகமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவர், பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் உதவியாளர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் உரிய மருத்துவர்கள் சிகிச்சை அளித்திடும் வகையில் காலி பணியிடங்களை நிரப்புவதோடு மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாலிபர் சங்க அந்தநல்லூர் ஒன்றியக்குழு சார்பில் புதனன்று பெருகமணி பகுதியில் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.ஒன்றியத் தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் லெனின், ஒன்றியச் செயலாளர் அஜித்குமார் ஆகியோர் பேசினர். சிபிஎம் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் வினோத்மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால், விதொச மாவட்டத் தலைவர் செல்வராஜ், மாணவர் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.