தாக்குதல் நடத்தி குடியிருப்புகளுக்கு தீ வைக்க போவதாக மிரட்டிய வன ஊழியர்
பழங்குடியினர் வட்டாட்சியரிடம் புகார்
தேனி, டிச.26- போடி அருகே பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்திய வனத்துறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போடி வட்டாட்சியரிடம் பழங்குடியின மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. போடி அருகே அருங்குளம் வனப்பகுதிக்குட்பட்ட பனங்கோடை மலை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பளியர் இன மலைவாழ் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மலை கிராமங்களில் உள்ள பட்டா நிலங்களுக்கு கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர். வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை போடிக்கு வந்து தங்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட உணவுக்கான பொருட்களை வாங்கிச் செல்வர். வழக்கம்போல் செவ்வாய் கிழமை (டிச. 24) இப்பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் போடிக்கு வந்துள்ளார். அப்போது அவரை வனத்துறை ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்தி தாக்கியும், அவதூறாக பேசியும், பழங்குடியினர் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு சென்று குடி யிருப்புகளை காலி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் தீ வைத்து கொளுத்தி விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பழங்குடியின மக்கள் வியாழன் கிழமை போடி வட்டாட்சியர் மணிமாறனிடம் மனு அளித்தனர். அதில், போடி வனத்துறையில் வேலை செய்யும் வாட்சர் பாண்டி என்பவர் கருப்பையாவை தாக்கியும், குடியிருப்புகளை தீ வைத்து கொளுத்தி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்துடன் வசித்து வருகிறோம். மேலும் எழுதாத வெள்ளை தாள்களில் மிரட்டி கையெழுத்தும் பெற்றுக் கொண்டார். உரிய நடவடிக்கை எடுப்பதுடன் எங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். பழங்குடியினர் மனு அளிக்கச் சென்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ராஜப்பன், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் எஸ்.கே.பாண்டியன், தாலுகா செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் உடன் சென்று வனத்துறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
ஜெயக்குமார் பரிசு பொருளை வாங்க மறுத்த இஸ்லாமியர்
சென்னை, டிச.27- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரவு தெரிவித்ததை கண்டித்து சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 49 ஆவது வட்டம் புதுமனை மசூதியையொட்டியுள்ள இஸ்லாமிய மக்கள் அமைச்சர் ஜெய க்குமார் வழங்குவதாக இருந்த பரிசுப் பொருளை வாங்க மறுத்தனர். இதுகுறித்து சிபிஎம் பகுதிச் செயலாளர் செல்வானந்தம் கூறுகையில், ‘ அமைச்சர் ஜெயக்குமார் அவரது தொகுதி முஸ்லீம் மக்களுக்கு சமையல் உபகரணங்களான ஹாட்பேக், தாபா தவ்வா உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கு வதற்கு டோக்கன் வழங்கியிருந்தார். இந்நிலையில் குடியு ரிமை திருத்த சட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்ததற்கு எதி ர்ப்பு தெரிவிக்கும் வகையில், இஸ்லாமிய மக்கள் பரிசு பொரு ட்களை வாங்க மறுத்துள்ளனர். இதனால் அமைச்சர் ஜெயக்கு மார் அப்பகுதிக்கு வரவில்லை. மேலும் இனி அதிமுகவினர் கொடுக்கும் எந்த பரிசுப்பொருளையும் வாங்க மாட்டோம் என அம்மக்கள் தெரிவித்துள்ளனர்’ என்றார்.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் தென்னக ரயில்வே அறிவிப்பு
மதுரை, டிச.27- ரத்து செய்யப்பட்ட ரயில்கள் வழக்கம்போல் இயக்கப் படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வியாழனன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில், திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி விரைவு ரயில், பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு பய ணிகள் ரயில், நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர் கோவில் பயணிகள் ரயில் மற்றும் செங்கோட்டை - மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் ஆகியவை 27.12.2019 முதல் வழக்கம்போல புறப்படும் ரயில் நிலையத்திலிருந்து இறுதி ரயில்நிலையம் வரை இடைநில்லாமல் இயக்கப் படும். சென்னை - குருவாயூர் - சென்னை விரைவு ரயில், சென்னை - தூத்துக்குடி - சென்னை இணைப்பு ரயில்ல ஆகி யவையும் வழக்கமான நேரங்களில் இயக்கப்படும்.