tamilnadu

img

உறையாத ரத்தத்தால் உயிருக்கு ஆபத்து

திருநெல்வேலி, மே 5-உறையாத ரத்தத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என ஹீமோபீலியா குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.நெல்லையில் ஹீமோபிலியா தினம்நெல்லை சங்கம் சார்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஹுமோபிலியா சொசைட்டி நெல்லை சங்கத்தின் செயலாளர் மருத்துவர் அன்புராஜன் தலைமை தாங்கினார்,சங்க தலைவர் சங்கரநாராயணன் வரவேற்று பேசினார், பிரசாந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், இதில் சிறப்பு விருந்தினர்களாக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் கண்ணன், மருத்துவ துறை தலைமை அதிகாரி மருத்துவர் ரவிச்சந்திரன், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வர் முனைவர் முகம்மது சாதிக், மதுரை ஹீமோபிலியா சொசைட்டி செயலாளர் லயா தர்மராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

உடலில் எங்காவது காயம் பட்டால், அங்கு ரத்தக்கசிவு ஏற்படும். நாம் எதுவும் சிகிச்சை எடுக்காவிட்டாலும், உடனடியாகவே ரத்தம் உறைந்து, ரத்தக்கசிவு நின்றுவிடும். ரத்த இழப்பைத் தடுப்பதற்காக இயல் பாகவே இருக்கும் பாதுகாப்பு அமைப்பு இது. ஒருவேளை அப்படிரத்தம் உறையாமல் போனால், உடலில் இருக்கும் மொத்த ரத்தமும் அந்தக் காயம் வழியாக வெளியேறி உயிருக்கே ஆபத்தாகிவிடும். ஹீமோபீலியா பாதிப்பு இருப்பவர்களுக்கு இப்படித்தான் ஆகிறது. அதனால்தான் ஹீமோபீலியா, உயிருக்கு ஆபத்தான பிரச்னையாகக் கருதப்படுகிறது. நிறைய பேர் தங்களுக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ, அறுவைசிகிச்சையின்போதோ இதை அறிந்துகொள்கிறார்கள். உடலின் உள்பகுதியில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு ரத்தக்கசிவு நிகழ்ந்தாலோ, மூளையில் ரத்தக்கசிவு ஏற் பட்டாலோ, இவர்களின் நிலைமை மோசமடைகிறது. ஹீமோபீலியா பற்றி உங்களுக்குத் தெரியுமா? இது பரம்பரை வழியாக வரும் ரத்தக்கசிவு நோய். இது ரத்தத்தின் உறையும் தன்மையை பாதிக்கும். பெரும்பாலும் ஆண்களுக்கே இந்த பாதிப்பு ஏற்படும். மிக அரிதாக பெண்களையும் பாதிக்கும்.

நம் உடலில் ரத்தத்தை உறைய வைப்பதில் உதவும் 13 காரணிகள் உள்ளன. காரணி 8 அல்லது 9 இல்லாதகாரணத்தால் ஹீமோபீலியா ஏற்படுகிறது. இவை இல்லாததால், ரத்தம்உறைவது இல்லை. எனவே இக்குறையுள்ளவர்கள் நீண்ட நேர ரத்தக் கசிவால் துன்பப்படுவார்கள். காரணி 8 இல்லாததால் ஏற்படும் ஹீமோபீலியா பாதிப்பு, 5 ஆயிரம் முதல் 10 ஆயிரத்துக்குள் ஒரு குழந்தையை பாதிக்கும். காரணி 9 இல்லாததால் ஏற்படும் ஹீமோபீலியா பாதிப்பு, 40 ஆயிரத்தில் ஒரு குழந்தையை பாதிக்கும். இது தவிர மற்ற காரணிகளின் குறைபாட்டால் வரக்கூடிய ரத்தக்கசிவு நோய் மிகவும் அரிதானது. ஹீமோபீலியாவை குணப்படுத்த முடியாது. ஆனால் சரியான சிகிச்சை, மருத்துவர் வழிகாட்டுதல்கள், ஆலோசனை மற்றும் சரியான பராமரிப்பு மூலம் இயல்பான வாழ்க்கை வாழ முடியும்.ஹீமோபீலியாவுக்கான உயிர் காக்கும் சிகிச்சை, ‘ஹிமோபீலியா உறைக் காரணி’ என அழைக்கப்படும் மருந்தாகும். இது ரத்தத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே இது மிக விலை உயர்ந்தது. ஹீமோபீலியா குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும், இந்த நோய் பாதிப்பு உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு உதவிகள் பெறவும் இந்த நாள் பயன்படுகிறது.என நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பேசினர், நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் ஹரீஸ் டெக்ஸ்சன் நன்றி கூறினார்.

ஹீமோபீலியா அறிகுறிகள்

பிறந்த குழந்தைக்கு தொப்புள் கொடியிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும். குழந்தை தவழும்போது அல்லது நடக்க ஆரம்பிக்கும்போது மூட்டுகள் மற்றும் தசைகளில் ரத்தப் போக்கு ஏற்படலாம். எங்காவது அடிபட்டபின், காயத்தில் வீக்கம் ஏற்படும். உடலில்வீக்கம் ஊதா நிறத்தில் கன்றிப் போய் இருக்கும். அல்லது கன்றிப்போகாமலும் இருக்கும்.மூட்டுகளில் அல்லது தசைகள் வீக்கம் தன்னிச்சையாக ஏற்படும். ஈறுகளில் அல்லது பல் எடுக்கும்போது அல்லது அறுவைசிகிச்சையின் போது நீண்ட நேர ரத்தப்போக்கு ஏற்படும். சில நேரங்களில் மூக்கிலிருந்தும் ரத்தக் கசிவு ஏற்படும்.