தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மீன்வளம், குடிநீர் மற்றும் அலையாத்திக் காடுகள் போன்ற இயற்கை வளங்களை பாதுகாக்க, தனியார் இறால் பண்ணைகளை ஒழிக்க வேண்டும் என மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தொடங்கி கட்டுமாவடி வரை கடலோர பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், கடற்கரையோர கிராமங்களில் ஊற்றுத் தோண்டி குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். அதேபோல் சுனாமி உட்பட இயற்கை சீற்றங்களை அலையாத்திகாடுகள் பாதுகாத்து வந்தன. அலையாத்திக் காடுகள் அழிந்ததால் தான் 2018 ஆம் ஆண்டு கஜாபுயல் தாக்கிய போது அதிகளவில் சேதம் ஏற்பட்டது. இவை அனைத்திற்கும் காரணம் தனியார் நடத்தி வரும் இறால் பண்ணைகளே என மீனவர்கள் கூறுகின்றனர்.
இதுபற்றி தஞ்சை மாவட்ட மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம்(சிஐடியு) மாவட்டத் தலைவர் திருவத்தேவன் குத்புதீன், மாவட்ட செயலாளர் தம்பிக்கோட்டை சுப்பிரமணியன் ஆகியோர் கூறும்போது, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தொடங்கி தஞ்சை மாவட்டம் கட்டுமாவடி வரை கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் முழுமையாக தனியார் இறால் பண்ணைகள் ஆக்கிரமித்துவிட்டன.
ஊற்றுத் தண்ணீர் போனது; குடம் தண்ணீர் ரூ.10
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பொதுமக்கள் ஊற்று தோண்டி அகப்பை மூலம் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது ஊற்று தோண்ட இடம் இல்லாமல் குடம் 10 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் முத்துப்பேட்டை தொடங்கி கட்டுமாவடி வரை இயற்கைச் சீற்றங்களை அலையாத்திக்காடுகள் பாதுகாத்து வந்தன. காடுகள் முழுவதையும் அழித்து இறால் பண்ணைகள் உற்பத்தியானதால் சுனாமியில் இருந்து தப்பித்த பொதுமக்களையும், தென்னை வளத்தையும் 2018ஆம் ஆண்டு கரை கடந்த கஜாபுயல், முத்துப்பேட்டைக்கும் கட்டுமாவடிக்கும் இடையே சேதுபாவாசத்திரம் பகுதியை சூறையாடிச் சென்றது.
அதுமட்டுமின்றி இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவுநீர் கடலில் கலப்பதால் மீன் இனப்பெருக்கம் இன்றி மீன்வளம் அழிந்து வருகிறது. இறால் பண்ணைகளை அதிகரிக்கும் வண்ணம் இறால் பண்ணை உரிமையாளர்கள், வளர்க்கப்படும் இறாலை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். குளிர்பதன கிடங்கு அமைத்து தர வேண்டும். இறால் குஞ்சுகளை அரசே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிகைகளை அரசுக்கு வைத்துள்ளனர்.
தென்னை சாகுபடி அழியும்
இதற்கான ஆய்வுக்கூட்டம் உயர் அதிகாரிகள் முன்னிலையில் சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள பிள்ளையார்திடலில் நடைபெற்றுள்ளது. இறால் பண்ணைகள் அதிகரித்தால் கடலோரத்தில் உள்ள பண்ணைகள் கிராமத்தை நோக்கி நகரத் தொடங்கும். அவ்வாறு நடந்தால் ஆழ்குழாய் கிணறுகளில் உப்பு தண்ணீர் வரத் தொடங்கி வாழ்வாதாரமாக விளங்கும் தென்னை சாகுபடி அழியும் சூழ்நிலையோடு, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும்.எனவே கடலோர பகுதிகளில் அலையாத்திக்காடுகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் தனியார் இறால் பண்ணைகளை படிப்படியாக குறைந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அப்போதுதான் இயற்கை வளங்களை காக்க முடியும்” இவ்வாறு அவர்கள் கூறினர்.