tamilnadu

img

கழனிவாசல் ஊராட்சியில் மின் பற்றாக்குறை

தஞ்சாவூர், மே 8-கழனிவாசல் ஊராட்சியில் நிலவும் மின் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ளது கழனிவாசல் ஊராட்சி. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி வீசிய கஜா புயலின் போது, சாய்ந்த மின் கம்பங்களுக்கு பதிலாக இரு மாதங்களில் புதிதாக மின் கம்பங்கள் நடப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போதிய அளவு மின் அழுத்தம் இல்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இங்குள்ள இரு மின்மாற்றியில் குறைந்த அழுத்த அளவே மின்சாரம்வருவதால் வீடுகளில் பயன்படுத்தப் படும் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, தொலைக்காட்சி மற்றும் விவசாய மின்மோட்டார்கள் இயங்காமல் உள்ளன. இதனால் பெண்கள் மற்றும்விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இங்குள்ள இரு மின்மாற்றி மூலம் 50-க்கும் மேற்பட்ட பம்ப்செட்டுகள், செல்போன் டவர், அரவை மில், 500-க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட வீடுகள் மின்இணைப்பை பயன்படுத்தி வருகின்றன. இதனால் அனைத்து தரப்பினரும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக தவித்து வருகின்றனர்.

நடவடிக்கை ஏதுமில்லை

இதுகுறித்து கென்னடி, நல்லதம்பி, காளிமுத்து, தங்கராஜ், ரெங்கசாமி, மாரிமுத்து, தாவூத் கனி, முகமது ரைஸ், முத்துலிங்கம், நீலகண்டன் உள்ளிட்ட இப்பகுதி மக்கள், மின் வாரிய அதிகாரிகள், ஆட்சியர் மற்றும்மின்துறை அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இப்பகுதியினர் தெரிவிக்கையில், “கழனிவாசல் மற்றும் சோழகனார்வயல் பகுதியில் கஜா புயலுக்கு பிறகு அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் மின் சாரம் இல்லாமல் தவித்து வருகிறோம். இங்குள்ள மின்மாற்றி அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் குழந்தைகள் படிக்க முடியாமலும், உறங்க முடியாமலும் தவிக்கின்றனர். மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். மேலும் பூக்கொல்லையில் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த மின்வாரிய அலுவலகம், வாடகை தராததால் கட்டட உரிமையாளரால் பூட்டப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மின்வாரிய அதிகாரிகளையும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.